Published:Updated:

"அம்மாகிட்ட பேச முடிஞ்சா இந்த ஒரு வார்த்தைதான் சொல்லுவேன்" முன்னாள் மேயரோடு கொலையான மாரியின் மகள் வீரலெட்சுமி!

மாரியம்மாள்

திருநெல்வேலி முன்னாள் மேயரோடு கொலை செய்யப்பட்ட மாரியம்மாளின் மகளின் உணர்வுபூர்வமான பதிவு

"அம்மாகிட்ட பேச முடிஞ்சா இந்த ஒரு வார்த்தைதான் சொல்லுவேன்" முன்னாள் மேயரோடு கொலையான மாரியின் மகள் வீரலெட்சுமி!

திருநெல்வேலி முன்னாள் மேயரோடு கொலை செய்யப்பட்ட மாரியம்மாளின் மகளின் உணர்வுபூர்வமான பதிவு

Published:Updated:
மாரியம்மாள்

பிரேக்கிங் நியூஸில், திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. நேற்று சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன; விரைவில் இதில் தொடர்புள்ள அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்படலாம் போன்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முன்னாள் மேயரோடு கொல்லப்பட்ட அவ்வீட்டுப் பெண் பணியாளர் மாரியம்மாளின் மகள்கள் என்ன செய்கிறார்கள் என்பதுகுறித்து தெரியவில்லை. அவர்களைச் சந்திக்கச் சென்றோம்.

உமாமகேஸ்வரி, முருக சங்கரன்
உமாமகேஸ்வரி, முருக சங்கரன்

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் நகரின் புறநகரான மேலபாளையம், அமுதா நகரிலுள்ள மாரியின் வீட்டை அடையாளம் காட்டினர். கண்காணிப்பு பணியிலிருந்த போலீஸாரின் சந்தேகப் பார்வையைக் கடந்து வீட்டுக்குள் சென்றோம். அரையிருட்டில் மெளனம் முழுமையாக நிறைந்திருந்தது அங்கு. லேசாகச் சிரித்த மாரியின் புகைப்படத்துக்கு மாலை போட்டிருந்தனர்.

மாரியம்மாளுக்கு மூன்று மகள்கள். வீரலெட்சுமி 12-ம் வகுப்பும், ஜோதிலெட்சுமி 10-ம் வகுப்பும், ராஜேஸ்வரி 8-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். அவர்களை வீட்டில் தேடியபோது, உள்ளிருந்து மாரியின் அம்மா வசந்தா வந்தார். எங்களைப் பார்த்ததும் துக்கம் கேட்டு வந்தவர்கள் என நினைத்து, பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தார். சிறிதுநேரம் கழித்து அமைதியானவரிடம் பேச்சுக்கொடுத்தோம். "இன்னிக்கு சடங்கு. எல்லோரும் அங்கே போயிருக்காங்க'' என்று முந்தானையில் மூக்கைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
யார் கையையும் எதிர்பாக்காமா புள்ளைங்கள வளத்துக்காட்டணும்னுதான் வீட்டு வேலைக்குப் போனாள். அவ புள்ளைங்கதான் அவளுக்கு உலகம்.
வசந்தா
வசந்தா

"19 வயசுல எம்பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்; 29 வயசுல புருஷனை இழந்துட்டு வந்து நின்னா; 39 வயசுல அவ மொத்த வாழ்க்கையே முடிஞ்சிருச்சு. மூணு பொண்ணுங்களோட தனிமரமா நின்னப்பக்கூட, கொஞ்சமும் அவ கலங்கல. 'மாரி மாதிரி பொண்ணுங்கள வளக்க முடியாது'னு ஊரே பேசும். எல்லா வேலையும் இழுத்துப் போட்டுட்டு செய்வா. இவ்ளோ சீக்கிரமா விட்டுட்டு போவான்னு நினைக்கலையே’’ என்று அழத் தொடங்கிவிட்டார். மெல்ல சமாதானப் படுத்தினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மாரியோடு புருஷன் செத்து 10 வருஷம் ஆச்சு. புத்தி சுவாதீனமில்லாம கொஞ்ச நாளு இருந்தாரு. ஆஸ்பத்திரிக்கு மட்டுமல்லாமல், கோயில், சர்ச், பள்ளிவாசல்னு எம்மக கூட்டிட்டு அலைஞ்சா. ஒண்ணும் சரியாகல. மாப்பிள்ள இறந்த புதுசுல திடீர் திடீர்ன்னு காய்ச்சல் வந்து படுத்துக்குவா. உடம்புல உசுரு மட்டுதான் இருக்கும். ஆனாலும், அவளுக்கு வைராக்கியம் அதிகம், யார் கையையும் எதிர்பாக்காமா புள்ளைங்கள வளத்துக்காட்டணும்னுதான் வீட்டு வேலைக்குப் போனாள். அவ புள்ளைங்கதான் அவளுக்கு உலகம். காலையிலேருந்து ராத்திரி தூங்குற வர ஓடி ஓடிஉழைச்சா. அஞ்சு வீடுகள்ல வேலைசெஞ்சுட்டு வந்தப்பறமும், நைட்டு பீடிசுத்துவா. அரை மணி நேரத்துல 10 கட்டு பீடி சுத்திருவா. வேல செஞ்சது போதும்.. தூங்குமான்னு சொன்னா, 'இதுல கிடைக்குற 50 ரூவாவ வெச்சு பால் பாக்கெட் வாங்கலாம்மா'னு சொல்லுவா.

மாரியம்மாள்
மாரியம்மாள்

கொஞ்சங் கொஞ்சமா காசு சேத்து இடத்த வாங்கி, வீடு கட்ட ஆரம்பிச்சா. இப்போதான் பேஸ்மென்ட் போட்ருக்கு, இடத்துக்குக்கூட இன்னும் 10,000 ரூவா பாக்கி நிக்குது. கொலை நடந்த அன்னைக்கு காலைல வீட்டு வேல பார்த்துட்டு இருந்த கொத்தனாரு டீ, வடை கேட்டாருன்னு சைக்கிள்ள போய்வாங்கி குடுத்துட்டு அவசர அவசரமா’’ லேட்டாச்சும்மா மேயரம்மா வீட்டுக்குப் போகணும்னு’’ சொல்லிட்டுபோனா... அப்ப போனவதான் திரும்பி வரவேயில்ல... எப்பவுமே மத்தியானம் 2 மணிக்கு சாப்பிட வர்றவ, அன்னிக்கு 5 மணியாகியும் வரலை. சரி, அடுத்த வீட்டுக்கு வேலைக்குப் போயிட்டாபோலன்னு நினைச்சு, இப்போ வந்துருவா அப்போ வந்துருவான்னு வாசலையே பார்த்துட்டு உக்காந்திருந்தேன். மேயர் வீட்டுல கொல நடந்துருச்சுனு சொன்னாங்க. பதறியடிச்சு அங்க ஓடினேன். எம்புள்ள மாரி செருப்பு வாசல்ல கிடந்ததபார்த்து உசுரே அத்துப்போச்சு. ரத்தம் உறைஞ்சு போயி எம்மக கிடந்தா. படுபாவிங்க மாரியையுமா கொண்ணுபோடணும்..." என்று அழுதுகொண்டே சொன்னார்.

சடங்குகள் முடிந்து மாரியம்மாளின் மகள்கள் வந்தனர். வெறுமை குடிகொண்டிருந்த அவர்களின் முகங்களைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது. மூத்த மகள் வீரலெட்சுமியிடம் பேசினோம்.

மாரியம்மாள் மகள்கள்
மாரியம்மாள் மகள்கள்

"அம்மாதான் எங்களுக்கு எல்லாமே. ஏதாவது வேணும்னா அம்மாவே கடைக்குப் போய் வாங்கிட்டு வருவாங்க. எங்கள ஒரு வேலையக்கூடசெய்யவிடமாட்டாங்க. அப்பா இல்லையேன்னு ஒருநாள்கூட நாங்க யோசிச்சதேயில்ல. சின்ன வயசுலேருந்து டெய்லியும் ஸ்கூல் போயிட்டுவந்து ஸ்கூல்ல எது நடந்தாலும் அம்மாகிட்ட சொல்லிடுவேன். எவ்வளவு கஷ்டமிருந்தாலும் அதை, எங்கக்கிட்ட காட்டிக்கிட்டதேயில்ல. எப்பவும் ஜாலியா சிரிச்சிட்டே இருப்பாங்க. ஒரு ஃப்ரெண்டு மாதிரிதான் பேசுவாங்க. பத்தாவது வரை நான் தமிழ் மீடியம்லதான் படிச்சேன். நான் கேட்டேங்கிறதுக்காக லெவன்த்ல இங்கிலீஷ் மீடியம் சேர்த்துவிட்டாங்க. நான் டாக்டராகணும்னு அம்மாக்கு ஆசை. நைட் நான் எவ்வளவு நேரம் படிச்சாலும் கூடவே உக்காந்திருப்பாங்க. நாங்க ஸ்கூல்போன கொஞ்ச நேரத்துலயே வேலைக்குப் போயிடுவாங்க. நைட் ஏழு எட்டு மணிக்குத்தான் வருவாங்க. டிவியில ஷின்சான் பார்த்துட்டு சிரிச்சிகிட்டே சாப்பிடுவோம். உடம்பு சரியில்லனாலும் லீவே போட மாட்டாங்க.

என்னை எப்பவுமே 'குட்டிம்மா'னுதான் ஆசையா கூப்பிடுவாங்க. அம்மாக்கு நாங்க டீ குடிக்காம, ஸ்கூல் போனால் பிடிக்காது. ஸ்கூல் வேன் வரும்போது வீட்டுல இருந்தா அடுத்த அஞ்சாவது நிமிஷம் 'டீ' போட்டு கொடுத்திடுவாங்க. நாங்க மூணுபேரும் சாப்பிட என்ன கேக்குறோமோ, எல்லோருக்கும் தனித்தனியா செஞ்சு குடுப்பாங்க. வீடியோலாம்பாத்து புதுசு புதுசா சமைச்சிக் கொடுத்திருக்காங்க.

அம்மாகிட்ட திருப்பி ஒருதடவ பேச முடிஞ்சா 'திரும்பி வந்துருங்க'ன்னு மட்டும்தான் சொல்லுவேன்.
வீரலெட்சுமி
மாரியம்மாள் குடும்பத்தினர்
மாரியம்மாள் குடும்பத்தினர்

இவ்வளவு பேர் இப்போ வந்துட்டே இருக்காங்க. ஆனா, எங்களுக்குத் தனியா இருக்க மாதிரிதான் தோணுது. ஏன் எங்கம்மா எங்களவிட்டு போனாங்கன்னே தெரியல. எனக்கு அம்மாவேணும். அம்மாகிட்ட திருப்பி ஒருதடவ பேச முடிஞ்சா 'திரும்பி வந்துருங்க'ன்னு மட்டும்தான் சொல்லுவேன். எங்கம்மா மாதிரி யாருமே இருக்க முடியாது" என்று கலங்கியபடியே பேசுகிறார் வீரலெட்சுமி. ஜோதிலெட்சுமியும், ராஜேஸ்வரியும் இந்த வித்தியாசமான சூழ்நிலையை எதிர்கொள்ளத் தெரியாமல், அக்கா பேசுவதை மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் படிப்புக்கு உதவும் சன்மேரி டிரெஸ்டைச் சேர்ந்தவர்கள் வந்து ஆறுதல் சொல்லிச் சென்றனர்.

தாயின் மரணம் என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. மூன்று சிறுமிகளின் குழந்தைப் பருவமும் எதிர்கால வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நிதி உதவி அவர்களின் கல்விக்கான செலவையும் அன்றாடத் தேவையையும் பூர்த்தி செய்யலாம். ஆனால், உடைந்து நொறுங்கியிருக்கும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? உடன் இருந்தார் என்பது தவிர, வேறு காரணமேயில்லாமல் ஓர் உயிர் பலியாகியிருக்கிறது. ஒரு தாயின் கனவு சிதைக்கப்பட்டு, மூன்று பெண் குழந்தைகளின் சந்தோஷம் பறிபோயிருக்கிறது. ஒரே வாரத்துக்குள் தலைகீழாக மாறியிருக்கும் இவர்களின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பேற்பது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism