Published:Updated:

களியக்காவிளை அழைத்துவரப்பட்ட தீவிரவாதிகள்! - வேகமெடுக்கும் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு விசாரணை

களியக்காவிளை எஸ்எஸ்ஐ கொலை வழக்கு
களியக்காவிளை எஸ்எஸ்ஐ கொலை வழக்கு

எஸ்எஸ்ஐ-யைக் கொலை செய்த தீவிரவாதிகளிடம், களியக்காவிளையில் வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன், கடந்த 8-ம் தேதி இரவு சுமார் 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை மூன்று தோட்டாக்கள் துளைத்தன. நான்கு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தன. சம்பவம் நடந்த அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்த நிலையில், களியக்காவிளை பள்ளிவாசல் பகுதி வழியாக இரண்டுபேர் தப்பி ஓடும் சிசிடிவி கேமரா காட்சிகள் போலீஸாருக்குக் கிடைத்தன. அதைவைத்து விசாரணை நடத்திய போலீஸார், எஸ்எஸ்ஐ வில்சனுக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. அவரை தீவிரவாதிகளான தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் கொலை செய்ததாகத் தகவல் வெளியிட்டனர். மேலும், அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஏழு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

தமிழக போலீஸ், கியூ பிரிவு போலீஸ் மற்றும் கேரள போலீஸார் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுப்பட்டனர். இதற்காக ஐஜி சண்முக ராஜேஷ்வரன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டார். எஸ்எஸ்ஐ வில்சனின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

எஸ்எஸ்ஐ-யை கொலை செய்த தீவிரவாதிகள் களியக்காவிளைக்கு வருவது, எஸ்எஸ்ஐ-யைக் கொலை செய்தபிறகு நடந்துசெல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கேரளத்திலும் சிக்கின. நெய்யாற்றின்கரை பகுதியில் அவர்கள் கையில் ஒரு பேக் வைத்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். மேலும், எஸ்எஸ்ஐ கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அதற்கு முன்பு பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சில தீவிரவாதிகள் டெல்லியிலும் கைதுசெய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வழக்கு வேகம் பிடித்தது. கேரளத்தின் தென்மலை, நெய்யாற்றின்கரை பகுதிகளில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

`பாலக்காட்டில் இருவர்; பூத்துறையில் ஒருவர்!' - களியக்காவிளை எஸ்.ஐ கொலையில் மூன்று பேர் கைது

இந்த நிலையில், டாக்ஸி டிரைவரான இஜாஸ் பாஷா என்பவரை பெங்களூர் ராம நகரியில் வைத்து கடந்த திங்கள்கிழமை போலீஸார் கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, திருவனந்தபுரத்திலிருந்து வேராவல் எஸ்க்பிரஸ் ரயிலில் தீவிரவாதிகள் இருவரும் பயணம்செய்வது தெரியவந்தது. இதையடுத்து, உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 14-ம் தேதி தமிழக, கர்நாடக காவல்துறை, ரயில்வே காவல்துறை மற்றும் கியூ பிரிவு போலீஸார் தெளஃபீக் மற்றும் அப்துக் சமீம் ஆகியோரைக் கைதுசெய்தது. இவர்களுக்கு, மும்பையிலிருந்து கொண்டுவந்த துப்பாக்கியை இஜாஸ் பாஷா கொடுத்துள்ளார். இவர்கள் உருவாக்கிய தீவிரவாத இயக்கத்தில் 17-பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும், அதில் மூன்றுபேர் தற்கொலைப்படை பயிற்சிபெற்றவர்கள் எனவும் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தக்கலை காவல்நிலையம்
தக்கலை காவல்நிலையம்

கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை இரண்டு தீவிரவாதிகளையும் கொலைச் சம்பவம் நடந்த களியக்காவிளைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். பின்னர், தக்கலை காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரணை நடத்திவருகின்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை அவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு