Published:Updated:

இந்தியாவிலேயே சென்னைதான் பாதுகாப்பற்ற மெட்ரோ நகரமா? - தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்வது சரியா?

சென்னை

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் பாதுகாப்பில்லாத மெட்ரோ நகரமாகச் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே சென்னைதான் பாதுகாப்பற்ற மெட்ரோ நகரமா? - தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்வது சரியா?

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் பாதுகாப்பில்லாத மெட்ரோ நகரமாகச் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது.

Published:Updated:
சென்னை

கடந்த 2020-ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. நாட்டிலேயே அதிக குற்றம் பதிவாகும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை
சென்னை

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மட்டும் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்றும், அதிக சூழலியல் குற்றங்கள் நடைபெறும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல, நாடு முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டோடு 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் குற்றச்சம்பவம் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குற்றங்கள் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலுள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நகரத்தில், குறைவான குற்றங்கள் நடைபெறும் முதல் நகரமாகக் கோவையும், இரண்டாவது நகரமாகச் சென்னையும் உள்ளன. மூன்றாவது நகரமாக கொச்சின் இடம்பிடித்திருக்கிறது. அதிக அளவு குற்றங்கள் நடைபெறும் நகரமாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுவே கோவையைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பெண்களில் 9 பேருக்கும், சென்னையில் 13.4 பேருக்கும் எதிராகக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
Representational Image

பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா முதலிடத்திலும், ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும், மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு 1,937.1 குற்றங்கள் பதிவாகின்றன என்று அறிக்கை கூறுகிறது. கொல்கத்தாவைப் பொறுத்தவரை 2014-ம் ஆண்டு 28,226 வழக்குகள் பதிவான நிலையில் படிப்படியாகக் குறைந்து 2020-ம் ஆண்டில் 18,277 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020-ம் ஆண்டு சென்னையில் மட்டும், 150 கொலை, 335 கொலை முயற்சி, மூன்று வரதட்சணை தொடர்பான மரணங்கள், 37 கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை, 31 பாலியல் வன்முறை, 658 திருட்டு என்று மொத்தம் 1,439 வன்முறைக் குற்றங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற கொலைக் குற்றங்களைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு 1,569, 2019-ம் ஆண்டு 1,745, 2020-ம் ஆண்டு 1,661 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 2020-ம் ஆண்டு மொத்தம் 28,493 கொலைகள் நடந்துள்ளன. 2019-ம் ஆண்டில் 28,194 கொலைகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் 2020-ம் ஆண்டு எந்த ஆணவக்கொலையும் நடைபெறவில்லை - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான 3,71,503 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 6,630 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் சென்னையில் 576 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் 17,008 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 15,271 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 14,371 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 4,338 வழக்குகள் பதிவாகியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மட்டும் வயதானவர்களுக்கு எதிராக 24,794 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1,581 குற்றங்கள் நடந்திருக்கின்றன; சென்னையில் 321 குற்றங்களும், கோவையில் 32 குற்றங்களும் நடந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் பட்டியல் இன மக்கள்மீது 50,291 குற்றங்கள், கொடுமைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2019-ம் ஆண்டைவிட (45,961) அதிகம். இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 12,714 குற்றங்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1,274 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

2020-ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் மீது 8,272 குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டு (6,528) மற்றும் 2019-ம் ஆண்டைவிட (7,570) அதிகம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை

2020-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற மொத்த பொருளாதாரக் குற்றங்கள் 1,45,754. தமிழகத்தில் மட்டும் 2,898 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 50,035 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றில், தமிழகத்தில், 782 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதேபோல நாடு முழுவதும் 61,767 சூழலியலுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றில், தமிழகத்தில் மட்டும் 42,756 குற்றங்களோடு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டு (14,536) மற்றும் 2019-ம் ஆண்டை விட (13,316) மிக அதிகம். தமிழகத்தில் பதிவான மொத்த வழக்குகளில் 42,731 வழக்குகள் சிகரெட் தொடர்பான வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகத்தில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம், ``தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் முதலில் அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கம் பெரும்பாலான மாநிலங்களில் கிடையாது. அவர்கள் கேஸ் ரிஜிஸ்டரில் மட்டுமே பதிவு செய்வார்கள். இப்படி இருக்க, இந்த வழக்குகளின் எண்ணிக்கையைவைத்து மட்டுமே சென்னையைப் பாதுகாப்பு இல்லாத நகரம் என்று கூறுவது சரியாக இருக்காது. தமிழகத்தில் குற்றங்களைக் குறைக்க, தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவது அனைவரும் அறிந்ததே" என்றார்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

தொடர்ந்து பேசியவர், ``சமீபத்தில் தெற்காசிய இதழில் வெளியான அறிக்கையின்படி உலக அளவில் சிசிடிவி கண்காணிப்பு அதிக அளவு உள்ள 130 நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமரா இருக்கின்றன. எந்தக் குற்றம் நடந்தாலும் வெகு விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சென்னை பாதுகாப்பில்லாத அல்லது அதிக குற்றங்கள் நடைபெறும் நகரம் என்று அந்த அறிக்கை சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது" என்று கூறினார்.