Published:Updated:

வடமாவட்டங்களில் பதுங்கிய ராஜேந்திர பாலாஜி? - திருப்பத்தூர் அதிமுக பிரமுகர்கள் 2 பேரிடம் விசாரணை!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வட மாவட்ட ஆதரவாளர்களிடமும் ராஜேந்திர பாலாஜி பேசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் பணமோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யக்கூடாது என ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில், தலைமறைவான ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. மாறு வேடத்தில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு என ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்ததால், 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டு ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருக்கும் 600 நபர்களின் செல் நம்பர்களை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்துவருகிறார்கள். ராஜேந்திர பாலாஜி போனில் பேசும் நபர்களைப் பிடித்துச் சென்று விசாரணையும் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வட மாவட்ட ஆதரவாளர்களிடமும் அவர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, சிவகாசி டி.எஸ்.பி பிரபாகர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணனை வந்து சந்தித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் துணைச் செயலாளர் விக்கி என்கிற விக்னேஷ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்ல உதவிச்செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து, ஜோலார்பேட்டை டி.எஸ்.பி-யை அழைத்த எஸ்.பி பாலகிருஷ்ணன், உடனிருந்து உதவி செய்ய அனுப்பி வைத்தார். அதன்படி, விக்னேஷ்வரன், ஏழுமலை ஆகியோரின் வீடுகளுக்கு இன்று காலை 4 மணிக்குப் போலீஸார் சென்றனர். இருவரிடமும், அங்கேயே மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, காலை 7 மணியளவில் இருவரையும் விருதுநகருக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``எங்களிடம் வந்து பிடித்து கொடுக்குமாறு உதவி கேட்டார்கள். நாங்களும் உதவிசெய்தோம். ஏழுமலை தொடர்பில் இருந்திருக்கிறார். ஏழுமலையுடன் விக்னேஷ்வரன் இருந்ததால் அவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான மற்ற விவரங்கள் எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.