Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: 7 நோயாளிகள் மரணம்; டீன் மெளனம்! - ஆட்சியர் விளக்கமும் உறவினர்கள் கொந்தளிப்பும்

கலெக்டர் சண்முக சுந்தரம்
கலெக்டர் சண்முக சுந்தரம்

வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் விபரீத சம்பவங்களின் பின்னணியில் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறார்களோ என்கிற அச்சம் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது.

வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் நான்கு பேர் உட்பட மொத்தம் ஏழு பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த விபரீதம் நடந்திருப்பதாக ‘பகீர்’ தகவல்கள் வெளியாகின. சம்பவம் குறித்து அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உயிரிழப்புக்கான காரணம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சண்முகசுந்தரம், ``ஏழு பேரின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமில்லை. வயது முதிர்வு, இதயப் பிரச்னை, சர்க்கரைநோய், வலிப்பு உட்பட வேறு காரணங்களால் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆக்ஸிஜன் கொள்கலன் பராமரிப்புப் பணி நடைபெற்ற நாளிலேயே அத்தனை பேரும் உயிரிழந்திருப்பதால், இந்தச் சம்பவம் பெரிதாக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

இறந்தவரின் சடலம்
இறந்தவரின் சடலம்

மாவட்ட ஆட்சியரின் இந்த விளக்கம் உண்மைக்குப் புறம்பானது என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். கொள்கலனிலிருந்த ஆக்ஸிஜன் ஐஸ் கட்டியாக உறைந்துவிட்டதால், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதில் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபரீதம் ஏற்பட்ட பின்னரே ஆக்ஸிஜன் கொள்கலன் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து உறைந்துபோன ஆக்ஸிஜனைக் கரைக்கும் முயற்சியும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொள்கலனில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் அளவு நேற்று காலை முதலே குறைந்திருக்கிறது. ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி வருவதற்கு தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, கொள்கலனிலிருந்து கோவிட் வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு வழக்கத்தைவிட மிகவும் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் பணியிலிருந்தவர்கள் சிலர்.

அதேசமயம், கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஆக்ஸிஜன் கொள்கலன் அமைந்துள்ள பகுதியிலிருந்து கோவிட் வார்டு அருகே வரை புதிய பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்றிருப்பதாகவும், அப்போது பள்ளம் தோண்டி பைப்லைனை அதில் பதித்துவிட்டு மண்ணைக் கொட்டி மூடாமலேயே விட்டுவிட்டனர். இப்படி அலட்சியமாக விட்டதால் பைப்லைன் மீது வாகனங்கள் ஏறிச் சென்றன. இதனால்கூட பைப்லைன் சேதமடைந்திருக்கலாம். சுமார் 25 நாள்களுக்குப் பின்னரே, மண்ணைக் கொட்டி பைப்லைனை மூடினர். அது, ஆக்ஸிஜன் செல்லும் பைப்லைனாகக்கூட இருக்கலாம். ஆக்ஸிஜன் வீணாக வெளியேறுவதைத் தடுக்க அந்த பைப்லைனில் உடைப்பு இருக்கிறதா என்பதை டெக்னீஷியன்கள் மூலம் கண்டறிய வேண்டும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள் சிலர்.

ஆக்ஸிஜன் கொள்கலன் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பு
ஆக்ஸிஜன் கொள்கலன் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பு

இதே போன்ற சம்பவம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா வார்டில் இருவர் உயிரிழந்த போதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும், வேறு பிரச்னைகள் காரணமாக இரண்டு பேரும் இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

விளக்கம் தராத டீன்:

அந்த சமயமும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. இப்போதும் மருத்துவமனை டீன் செல்வி மௌனம் சாதிக்கிறார். மருத்துவமனையில் எது நடந்தாலும் விளக்கம் தர வேண்டிய இடத்தில் டீன் இருக்கிறார். ஆனால், எது நடந்தாலும் விளக்கம் சொல்லாமல் ஒளிந்துகொள்கிறார் என்று கொந்தளிக்கிறார்கள் இறந்தவர்களின் உறவினர்கள். செய்தியாளர்கள் பலரும் டீன் செல்வியைச் சந்திக்க முயன்றனர். சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பலமுறை போன் செய்தும் டீன் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் எனக் கொந்தளிக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு