Published:Updated:

வேலூர்: `சிறைக்குள் தாக்கப்பட்டாரா முருகன்?!' - அதிர்ச்சி கொடுத்த அவசர அழைப்பு

முருகன்
News
முருகன்

‘‘விரைவாக வந்து என்னைச் சந்தியுங்கள்’’ என்று வழக்கறிஞரிடம் போனில் பதறியிருக்கிறார், வேலூர் சிறையில் உள்ள முருகன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கைதிகளான முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இருவரும், இலங்கை மற்றும் லண்டனில் உள்ள தங்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேச, சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். சிறை நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்துவிட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. அதே சமயம், மாதம் இருமுறை நடைபெறும் நளினி, முருகன் சந்திப்பும் ஊரடங்கால் ரத்துசெய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக மனைவியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் தவித்த முருகன் திடீரென கடந்த மாதம் 1-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ‘எனக்கு வாழப் பிடிக்கவில்லை. ஜீவ சமாதி அடைய அனுமதி கொடுங்கள்’ என்று கோரி 27 நாள்களாகத் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால், 5 முறை உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறை மருத்துவர்கள் முருகனின் உடல்நிலையைத் தீவிரமாகப் கண்காணித்துவந்தனர். இதனிடையே, முருகனைச் சந்தித்து பேச மகள் நளினியை அனுமதிக்கக் கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசு தரப்பில், ‘‘நளினியும் முருகனும் சிறைக்குள் 30 நிமிடம் வீடியோ கால் மூலமாகப் பேச அனுமதிக்கப்பட்டனர். இதனால் முருகன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நளினியின் தாயார் தொடுத்த அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

நளினி
நளினி

இந்தநிலையில், நேற்று முன்தினம் (6-ம் தேதி) சிறை விதிகளின்படி தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் போனில் பேசிய முருகன், ‘‘அருகில் சிறை அதிகாரிகள் உள்ளனர். போனில் பேச முடியாத ஓர் விவகாரம் நடந்திருக்கிறது. தயவுசெய்து விரைவாக நேரில் வந்து என்னைச் சந்தியுங்கள்’’ என்று குமுறியிருக்கிறார். அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதால், முருகன் மீது சிறை அதிகாரிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மனரீதியாக முருகனைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாகவும் சிறை அதிகாரிகள் மீது ஏற்கெனவே சர்ச்சை இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சீக்கிரமாக வாங்க... முக்கியமான விஷயம் பேசணும்’

நம்மிடம் பேசிய முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி, ‘‘வழக்கறிஞர் என்ற முறையில் கடந்த 6-ம் தேதி மதியம் என்னிடம் 5 நிமிடம் போனில் பேசினார் முருகன். அதேபோல், உறவினர்கள் என்ற முறையில் காட்பாடியில் உள்ள பெண் ஒருவரிடமும், என்னுடைய ஜூனியர் தேன்மொழியிடமும் பேசுவதற்கு சிறை நிர்வாகம் அனுமதித்தது. காட்பாடியில் உள்ள அந்தப் பெண் முருகனின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். வெளிநாடுகளிலிருந்து அவர்கள் எப்போது வந்தாலும் இந்தப் பெண்ணின் வீட்டில்தான் தங்குவார்கள்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

என்னிடம் முருகன், ‘சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது. மேக்ஸிமம் எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வாங்க. சிறைத்துறை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று வந்து சந்தியுங்கள்’ என்றார். நானும் முருகனைச் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறேன். ஊரடங்கு என்பதால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சிறை அதிகாரிகள் முருகனைத் தாக்க வாய்ப்பில்லை. அவர்களால் தாக்கவும் முடியாது. அதேநேரம், அச்சுறுத்த முடியும். அப்படித்தான் அறைக்குள் புகுந்து லத்தியைக் காட்டி மிரட்டுகிறார்கள்.

சிறை அதிகாரிகள் முருகனைத் தாக்க வாய்ப்பில்லை. அவர்களால் தாக்கவும் முடியாது.
வழக்கறிஞர் புகழேந்தி

சிறை அதிகாரிகளை முருகன் மிரட்டுகிறார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய். முருகனைப் பொறுத்தவரை பண்பாகவும் அன்பாகவும் பேசக் கூடியவர். வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு 7-வது முறையாக இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

‘வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேசுவதற்கு சிறைத்துறையில் விதி இல்லை. உள்நாட்டில் வசிப்பவர்களிடம் பேசிக்கொள்ளலாம்’ என்று ஏற்கெனவே அரசுத் தரப்பிலும் சிறைத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மற்ற கைதிகளைப் போன்று தனி நபரின் அடிப்படை உரிமையைச் சார்ந்த விவகாரம் என்பதால் வீடியோ காலில் பேச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதில், முருகனை விலக்கி வைத்து மற்ற கைதிகளுக்கு மட்டும் வாய்ப்பு வழங்குவது ஏற்க முடியாது’’ என்றார்.

அதே சமயம், முருகனும் அவரின் வழக்கறிஞரும் சிறைத்துறை மீது கூறும் குற்றச்சாட்டுகளைச் சிறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்துவருகிறார்கள்.