Published:Updated:

அதிகரிக்கும் குற்றங்கள்... குறைவாகக் கணக்கு காட்டப்படும் குற்றவிகிதம்... என்ன காரணம்?

இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம்
இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம் ( Vikatan Infographics )

இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம் என்பது மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடந்தன என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரை, 581 என்றிருந்த இந்தியாவின் மொத்த குற்ற விகிதம், கடந்த 3 ஆண்டுகளாக 379, 388, 383 எனக் குறைந்துள்ளன. இதன் பின்னணி காரணம் என்ன?

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால், ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் உள்ள மாநில காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிடப்படும். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2017-ம் ஆண்டின் அறிக்கை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாமதமாக வெளியிடப்பட்டது; 2018-ம் ஆண்டு அறிக்கை, கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள குற்றங்களின் தரவுகளில், இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம் குறைந்துவருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. மொத்த குற்ற விகிதம் என்பது, மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடந்தன என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரை, 581 என்றிருந்த இந்தியாவின் மொத்த குற்ற விகிதம், கடந்த 3 ஆண்டுகளாக 379, 388, 383 ஆகிய எண்களில் குறிப்பிடப்படுகிறது.

Representational Image
Representational Image

இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது என்பது இந்தியர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் என்றும், இந்தியாவில் குற்றச் செயல்கள் குறைந்துவிட்டன என்றும் கருதுவதற்கு இடமளிக்கிறது. எனினும், மத்திய அரசு புதிதாகப் பின்பற்றும், கணக்கிடும் வழிமுறைகளில் மாற்றம் செய்துள்ளதால், மொத்த குற்ற விகிதம் குறைவாகக் காட்டப்படுகிறது. தொடர்ந்து புள்ளியியல் துறையில் ஏற்படும் மாற்றங்களும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளோடு ஒப்பிடப்படுவதால் சர்ச்சைகள் எழுகின்றன. இதன் காரணம், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பின்பற்றிய `முதன்மைக் குற்ற விதி' (Principle Offence Rule) என்பதாகும்.

முதன்மைக் குற்ற விதி என்றால் என்ன?

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பின்பற்றும் முதன்மைக் குற்ற விதி என்பது, ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால், அது ஒரு வழக்காக கணக்கில் கொள்ளப்படும். கணக்கில் கொள்ளப்படும் அந்த வழக்கில், மிகப்பெரிய குற்றம் எதுவோ, அதிக தண்டனை பெற்றுத் தரும் முதன்மைக் குற்றம் எதுவோ, அதன் பெயரில் மட்டுமே சேர்க்கப்படும்.

உதாரணமாக, டெல்லி மாணவி நிர்பயாவின் வன்கொடுமை சம்பவத்தைக் கணக்கில் கொண்டால், அந்தக் குற்றத்தில் கடத்தல், வன்கொடுமை, கொலை ஆகியவை நடந்துள்ளபோதும், அதில் முதன்மைக் குற்றமாக `கொலை' மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்; பாலியல் வன்கொடுமை கணக்கில் சேர்க்கப்படாது. பசு குண்டர்களால் நிகழ்த்தப்படும் கும்பல் படுகொலைகள், `கொலை' என்று மட்டுமே கருதப்படும்; அதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட மத அடிப்படையிலான தாக்குதல் கணக்கில் சேர்க்கப்படாது.
எங்கே ரகசியம் காப்பது; தவிர்ப்பது... பணத்தைப் பிறரிடம் பகிர எது லிமிட்? - உளவியல் விளக்கம்

முதன்மைக் குற்ற விதி, உலகில் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம், இந்த விதியை ஏற்பதற்குக் காரணமாக, இதற்கு முன்பு தரவுகள் சேகரிக்கப்பட்ட முறையைக் காட்டி, அது குற்றங்களின் எண்ணிக்கையை அதிக அளவில் காட்டியதாகக் கூறியது. உதாரணமாக, டெல்லி மாணவி நிர்பயா வழக்கில், கடத்தல் தனியாக, வன்கொடுமை தனியாக, கொலை தனியாகப் பதிவு செய்யப்படும்போது, அது 3 வழக்குகளாக மாறிவிடுகிறது எனக் கூறுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

பழைய முறைக்கும் புதிய முறைக்கும் மாற்றாக, CCTNS ( Crime and Criminal Tracking Network & Systems) என்ற முறையைப் பரிந்துரைக்கிறது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம். 2009-ம் ஆண்டு நடந்த மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் அரசு, நாடு முழுவதும் காவல் நிலையங்களுக்கு இடையிலான தொடர்பில் பிரச்னை இருப்பதாக உணர்ந்தது. அதனால், ஒவ்வொரு காவல் நிலையமும் இணையத்தில் இணைந்து, குற்றங்கள்குறித்து ஆன்லைனில் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கியது. எனினும், கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பணி 60 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிகாரபூர்வ வலைதளம் கூறுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம்
இந்தியாவின் ஒட்டுமொத்த குற்ற விகிதம்

2015-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 4 பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 4 பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனினும், மிகச்சிறிய வேறுபாடு கொண்ட இந்தக் கணக்கெடுப்பைப் போல, 2015, 2018-ம் ஆண்டுகளின் மொத்த குற்ற விகிதத்தை ஒப்பிடுகையில், 2015-ம் ஆண்டு 581.8 எனவும், 2018-ம் ஆண்டு 383.5 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது முரணாக அமைகிறது.

புதிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம், நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கணக்குக் காட்டுகிறது. இதன்மூலம், மதத்தின் அடிப்படையில் நிறுவனமயப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்படும் கொலை, வெறும் `கொலை' என்று சுருங்கிவிடுகிறது; வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் கொலை செய்யப்பட்டால், அது `கொலை' என்று மட்டுமே கருதப்படுகிறது. புள்ளிவிவரங்களைத் தாமதாக வெளியிடுவது, அவற்றில் மாற்றம் செய்வது, கணக்கிடும் முறையை மாற்றுவது எனப் புள்ளிவிவரங்கள் தொடர்பான சர்ச்சைகளில் மத்திய பி.ஜே.பி அரசு தொடர்ந்து சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு