Published:Updated:

`அரிவாள் கட்டுப்பாடு மட்டுமே அமைதியை உண்டு பண்ணிவிடுமா?' - சில கேள்விகளும் பதில்களும்!

``தமிழக காவல்துறையின் இந்த உத்தரவு என்பது, இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவோரை உள்ளூர் காவல் நிலையத்தினர் மிரட்டுவதற்கும், துன்புறுத்துவதற்கும்தான் அதிக அளவில் பயன்படும்'' என்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்!

`ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில், மாநிலம் முழுக்க ரெளடிகளை வேட்டையாடிய தமிழக காவல்துறை, தற்போது, `அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுத விற்பனை'யைக் கண்காணிப்பது குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டு பல்வேறு விவாத சர்ச்சைகளை ஆரம்பித்துவைத்திருக்கிறது!

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில், அதிகரித்துவந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களால் 'சட்டம், ஒழுங்கு நிலை குறித்த கேள்வி' சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 23-ம் தேதி இரவில், `ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்திய தமிழக காவல்துறை, 3,325 ரெளடிகளைக் கைதுசெய்தது. ரெளடிகள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தது.

கொலைக் கருவிகள்
கொலைக் கருவிகள்

இதையடுத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்களோடு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய தமிழக காவல்துறை, தற்போது, ஆயுதங்கள் தவறானவர்களின் பயன்பாட்டுக்குச் செல்வதைத் தடுக்கும்பொருட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, `அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும், ஆயுதம் வாங்க வருவோரிடம், என்ன காரணத்துக்காக ஆயுதம் வாங்கப்படுகிறது என்பதைக் கேட்டறிவதோடு, ஆயுதம் வாங்குவோரின் பெயர், முகவரி மற்றும் செல்பேசி எண்களையும் பெற்றுக்கொண்ட பிறகே ஆயுத விற்பனை செய்யப்பட வேண்டும். ஆயுத விற்பனை செய்யப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்' என்பது போன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

3,325 ரௌடிகள் கைது! - ஆபரேஷன் டிஸ்ஆர்ம்-க்குப் பிறகு டி.ஜி.பி அதிரடி உத்தரவு

தமிழகக் காவல்துறையின் இந்த உத்தரவு பரவலாகப் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிவருகிறது. அதாவது, சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுவரும் ரெளடிகளின் கொட்டத்தை அடக்க, தமிழகக் காவல்துறைதான் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், அரிவாள், கத்தி உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை விற்பனை செய்யும்போது வாடிக்கையாளரின் பெயர், முகவரியை சேகரிப்பதென்பது நடைமுறையில் சிரமமான காரியம். மேலும், தவறு செய்யும் நோக்கில் ஆயுதம் வாங்க வருபவர்கள், வீட்டு உபயோகத்துக்காக வாங்குகிறோம் என்ற பொய்யான தகவலைச் சொல்லி வாங்கிச்செல்ல முடியும் என்கிறபோது, உண்மையை எப்படிக் கண்டறிய முடியும்... என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அரிவாள் - கத்தி தயாரிப்பு பணி
அரிவாள் - கத்தி தயாரிப்பு பணி

இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி-யின் புதிய உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான தராசு ஷ்யாம்,

``அரிவாள், கத்தி போன்றவற்றை ஆயுதம் என்றே சொல்ல முடியாது. அன்றாடப் பயன்பாடுகளுக்குப் பயன்படுகிற ஒரு கருவி என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக, விவசாயத் தொழிலிலும் வீட்டு உபயோகத்திலும் அரிவாள், கத்தி போன்ற உபகரணங்களின் பயன்பாடு அதிகம்.

அரிவாளைப் பயன்படுத்துகிற நபர்களைப் பொறுத்துதான் அது கொலைக்கருவியாக மாறுகிறது. அப்போதும்கூட, அது துப்பாக்கி போன்ற விசேஷமான கொலைக்கருவியாக இல்லை.

எனவே, நடைமுறையில் இந்த உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை. எத்தனையோ பயன்படாத சட்டங்கள் நம் நாட்டில் உண்டு. அந்த வரிசையில் இந்த உத்தரவும் பயன்படாத வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

`மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்; தமிழகம் மாறிவருகிறது!' - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏனெனில், வீச்சரிவாள், வெட்டரிவாள், கையருவாள் என மூன்று வகையான அரிவாள்கள் உண்டு. வறட்சியான பகுதிகளில் நடைபெறும் விவசாயம் சார்ந்த வேலைகளில் வீச்சரிவாள் பயன்படுகிறது. பாய் செய்யப் பயன்படும் கோரைப் புற்களை அறுப்பதற்கும், பனங்காட்டு வேலைகளுக்கும் வீச்சரிவாள் தேவை அத்தியாவசியமாக இருக்கிறது. வெட்டரிவாள் மிகப்பெரிய அளவில் இருக்கும். வாழை விவசாயத்தில் இந்த வகை அரிவாள்களைத்தான் பயன்படுத்துவார்கள். மாட்டுத் தீவனத்துக்காக புல் அறுப்பதில் ஆரம்பித்து கழனி சம்பந்தப்பட்ட பல்வேறு வேலைகளிலும் கையரிவாளின் பங்கு அதிகம்.

இப்படி விவசாயம் சார்ந்த தொழில்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த வகை அரிவாள்கள் கிராமச் சந்தைகளில்தான் அதிக அளவில் விற்பனையாகும். அப்படி விற்பனையாகும் இடங்களில், 'அரிவாள் வாங்க வேண்டும் என்றால், உங்கள் ஆதார் கார்டைக் காட்டுங்கள்' என்று சொல்ல முடியுமா என்ன? எனவே, நடைமுறையில் இது சாத்தியமில்லாதது.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

அரிவாள் - கத்திகளைத் தயாரிக்கும் பட்டறைகளும்கூட நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு பட்டறை என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளூர் காவல் நிலையத்துக்கு நன்றாகவே தெரியும். அதேபோல், அரிவாள்களை வாங்கிச் செல்வோரைப் பற்றிய விவரங்கள் பட்டறையாளர்களுக்கும் தெளிவாகவே தெரியும். எனவே, இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்துதான் அரிவாள் தயாரிப்பை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்பது இல்லை.

அதேசமயம், தமிழக காவல்துறையின் இந்த உத்தரவு என்பது, இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருவோரை உள்ளூர் காவல் நிலையத்தினர் மிரட்டுவதற்கும், துன்புறுத்துவதற்கும்தான் அதிக அளவில் பயன்படும். கூலிப்படையினர் பயன்படுத்துகிற கொடுவாள், சுருள் கத்தி போன்ற ஆபத்தான பொருள்களைத் தயாரிப்பதென்பது கொஞ்சம் விசேஷமானது. எனவே, இவற்றைத் தயாரிப்பவர்களையும் காவல்துறையினர் எளிதாகவே கண்டுபிடித்துவிட முடியும். மற்றபடி, அரிவாள் கட்டுப்பாடு மட்டுமே தமிழ்நாட்டில் அமைதியை உண்டு பண்ணிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது'' என்கிறார் அழுத்தமாக.

``தொண்டர்களை அருகில் அமர வைத்து சாப்பிடச் செய்தவர் ராமதாஸ் அய்யா" - அன்புமணி ராமதாஸ் பேச்சு.

முன்னாள் காவல்துறை அதிகாரியான கருணாநிதி, இந்தப் புதிய உத்தரவு குறித்துப் பேசும்போது,

``பரபரப்பாக ஆள் நடமாட்டம் உள்ள பொது இடத்திலேயே அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டுச் செல்கிற சம்பவங்களையெல்லாம் நாம் பார்க்கிறோம்தான். ஆக, ஆக்கபூர்வமான வேலைகளுக்குப் பயன்படுத்தாமல், இது போன்ற குற்றச் செயல்களுக்கு அரிவாளைப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருவதை அனுபவபூர்வமாக பார்த்தறிந்ததாலேயே இது போன்ற முன்னெச்சரிக்கை உத்தரவுகள் காவல்துறையினரால் பிறப்பிக்கப்படுகின்றன. எனவே, விளைவுகளுக்கு ஏற்ற நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

மரம் வெட்டுவதற்கோ அல்லது விவசாய வேலைக்காகவோ கையில் கருவியை வைத்திருப்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்ள மாட்டார்கள். அதேசமயம் உரிய காரணமின்றி கொடிய கருவிகளை சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் வைத்திருந்தால், அவரைக் காவல்துறையினர் கைதுசெய்ய ஏற்கெனவே சட்டத்தில் இடம் இருக்கிறது.

அரிவாளை வாங்குகிற நபர், நல்ல நோக்கத்துக்காகத்தான் வாங்குகிறாரா என்பதை அறிந்துகொண்டு விற்பனை செய்யும்போது, ஆயுதப் புழக்கம் என்பது சர்வ சாதாரணமாக எல்லோரின் கைகளுக்கும் சென்றுவிடாது. மேலும் இது போன்ற கட்டுப்பாடுகள் என்பவை குற்றங்களைத் தடுப்பதற்கான முதற்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

கருணாநிதி
கருணாநிதி

எனவே, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைத் தயாரிப்பவர்களும், விற்பனை செய்வோரும் இதுநாள்வரை செய்துவந்ததைப் போலின்றி மிகவும் கவனமாக, அக்கறையோடு செயல்படவேண்டியிருக்கிறது. பொருளை வாங்குபவர் யார், நல்ல பயன்பாட்டுக்காகத்தான் வாங்குகிறாரா என்பதையெல்லாம் உறுதிபடுத்திக்கொண்டே விற்பனை செய்யவேண்டியிருக்கிறது. சாதாரணமாக ஒரு வாடகை சைக்கிள் கொடுப்பதாக இருந்தால்கூட, வந்திருப்பவர் யார், தெரிந்தவர்தானா, சைக்கிளை திரும்ப ஒப்படைத்துவிடுவாரா என்பதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகுதானே வாடகைக்கு விடுகிறோம். அதேபோல், இந்த விஷயத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வதென்பது சாத்தியமான ஒன்றுதான்.

அதேசமயம், இந்தப் புதிய உத்தரவை செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, பட்டறை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோரை சோதனை செய்கிறேன் என்ற பெயரில் காவல்துறையைச் சேர்ந்த எவரேனும் மிரட்டுவதாகப் புகார் வந்தால், அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். தவறு செய்பவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. அதற்காக ஒரு புதிய உத்தரவையே வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது'' என்கிறார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு