சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது.
வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.
சென்னை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்துவந்த விக்னேஷ், அவரது நண்பர் சுரேஷ், இருவரும் ஏப்ரல் 18 இரவு கெல்லீஸ் சந்திப்பில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி ஜி5 காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், விக்னேஷ் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்த லாக்அப் மரணத்தை மூடி மறைக்க காவல்துறை மேற்கொண்ட தொடர் முயற்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. விக்னேஷ் கைதுசெய்யப்பட்டது தொடங்கி, இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் இருக்க அவரது குடும்பத்தினருக்குக் காவல்துறையால் பணம் கொடுக்கப்பட்டது வரை இந்த நிகழ்வில் காவல்துறை மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கொந்தளிக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும், அது சட்டமன்றத்தை எட்டுவதற்கு சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து ஒருவாரம் ஆகியிருக்கிறது.
இந்த மரணம் குறித்து அ.தி.மு.க சார்பில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் 26 அன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு விளக்கமளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த வழக்கு சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்துவருகிறது. தலைமைச் செயலக காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் முடிவுகள் எப்படியிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில், உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
இந்தப் பின்னணியில், விக்னேஷின் லாக்அப் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வெளியிட்டிருக்கிறது.
“பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இருக்கக் கூடிய பாதுகாப்புப் பிரச்னை, சாட்சிகள் மிரட்டப்படும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு அப்பால் அவர்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பத்திரிகையாளர்கள் தொடர்ந்து விக்னேஷின் குடும்பம் குறித்தத் தகவல்களை எங்களிடம் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், வழக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முறையாக அவர்கள் சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடிய சூழல் இப்போதுதான் அமைந்தது” என்றார் ஹென்றி திபேன்.
மேலும், “எப்போதும் கள ஆய்வுப் பணியின்போது பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் என இரு தரப்பினரையும் சந்தித்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்படும். விக்னேஷ் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கும், பாதுகாப்பதற்கும் முழுக்கவனம் செலுத்தப்பட்டதால் காவல்துறை தரப்பினரைச் சந்திக்க இயலவில்லை. எனவே, இந்தச் சந்திப்பு பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் வாக்குமூலங்களைப் பொதுமக்களிடம் முன்வைப்பதாக அமையும்” என்று சந்திப்பின் நோக்கம் குறித்தும் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, விக்னேஷின் சகோதரர்கள் வினோத் (30), விஜய் (28), வீரா (24), சத்தியா (22), சூரியா (20) ஆகியோர், விக்னேஷ் மரணத்தைத் தொடர்ந்து காவல்துறை மூலம் தங்களுக்கு நேர்ந்தவற்றைப் பகிர்ந்தனர். தாய், தந்தை இருவரையும் சிறுவயதிலேயே இழந்துவிட்ட இவர்களுக்குக் குடியிருக்க வீடில்லாமல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றின் தேவை குறித்தோ, அதைப் பெறுவது குறித்தோ அறியாத நிலையில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, விக்னேஷ், சுரேஷ் இருவரும் சம்பவம் நடந்த அன்று பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர் பிரபு, அன்று நிகழ்ந்தவற்றைப் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்தார்.
விக்னேஷின் அண்ணன் வினோத், சம்பவ சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷின் அம்மா கற்பகம் ஆகியோரின் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.
வாக்குமூலத்தை முழுமையாக வாசிக்க, இங்கு க்ளிக் செய்யவும்.