ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தில் கொல்லப்பட்ட 16 வயதான முதசீர் என்பவரின் தாய் அவரைப் பற்றி பேசியுள்ளார். கடந்த ஜூன் 10-ம் தேதி ராஞ்சியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மாவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் கற்களை வீசத் தொடங்கியதும், கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் போராட்டக்காரர்கள் லத்திகளை வைத்தும் தாக்கப்பட்டனர். இதில் 22 பேர் காயமடைந்ததோடு, இருவர் கொல்லப்பட்டனர்.

அந்த இருவரில் ஒருவர்தான் 16 வயதான முதசீர். போராட்ட சமயத்தில் கிடைத்த சில காணொளிப் பதிவுகளில் பா.ஜ.க-வுக்கு எதிராக இவர் கோஷங்களை எழுப்புவது போல் உள்ளது. முதசீரின் கடைசி நிமிடங்கள் பற்றி கூறும் அவரின் தாய், ``கடைசியாக நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சிக்னல் சரியாக இல்லாததால் என்னை போனை வைக்குமாறு கூறினான். கொஞ்ச நேரம் கழித்து அவன் நண்பனிடம் இருந்து போன் வந்தது அதில் அவன் சுடப்பட்டு இறந்துவிட்டான் எனத் தெரிந்தது. அவன் என்னுடைய ஒரே மகன்.அவன் என்னிடம் இருந்து பறித்துக்கொள்ளப்பட்டான்" என கண்ணீர் மல்க ஊடகங்களிடம் கூறினார். தன்னுடைய மகனை நினைத்து கதறி அழுதவர், மகனின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றொருவர் 22 வயதான் ஸஹில் அன்சாரி. இந்தச் சம்பவம் குறித்து கூறிய ஸஹிலின் உறவினர் ஒருவர், ``அவன் வன்முறை நடந்த இடத்துக்கு அருகில் பணிபுரிந்து வந்தான். அவன் வீட்டுக்கு போகும் வழியில் எப்படியோ இந்த கலவரத்தில் மாட்டி குண்டடிபட்டு இறந்திருக்கிறான். காவல்துறை ஏன் நேரடியாக இப்படி துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்? அவர்கள் கண்ணீர் புகை போன்ற எதையாவது பயன்படுத்தியிருக்கலாம்." எனக் கூறினார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மக்களிடம் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஊடகங்களிடம் பேசிய அவர், ``ஜார்கண்ட் மக்கள் இதற்கு முந்தைய சமயங்களில் பொறுமையாக இருந்துள்ளார்கள். யாரும் பதற்றமடையத் தேவையில்லை. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதியைப் பாதுகாக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்." எனக் கூறினார்.