Published:Updated:

வேலை கிடைக்காத விரக்தி; தற்கொலை செய்துகொண்ட கபடி வீராங்கனை - தொடரும் சோகம், என்னதான் தீர்வு?

தற்கொலை

சென்னையில் வேலை கிடைக்காத விரக்தியில் தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

வேலை கிடைக்காத விரக்தி; தற்கொலை செய்துகொண்ட கபடி வீராங்கனை - தொடரும் சோகம், என்னதான் தீர்வு?

சென்னையில் வேலை கிடைக்காத விரக்தியில் தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

Published:Updated:
தற்கொலை

சென்னைக்கு அருகிலுள்ள மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி தர்மராஜ். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். இவரின் இளையமகள் பானுமதி (25). கபடி வீராங்கனையான இவர் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு கபடிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இளங்கலை படிப்பை முடித்துள்ள பானுமதி, தற்போது முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். படித்துக்கொண்டிருந்தாலும் வேலையும் தேடி வந்துள்ளார்.

பானுமதி
பானுமதி

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மதியம் வீடு திரும்பிய பானுமதி தனது அறையில் தூக்குப்போட்டுக் கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், பானுமதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பானுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பானுமதி வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பானுமதியின் செல்போனைக் கைப்பற்றி விசாரணையை நடைபெற்று வருகிறது.

தொடரும் சோகம் என்னதான் தீர்வு:

தமிழகத்துக்காகவும் இந்தியாவுக்காகவும் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காத விரக்தியில் தான் இருந்து வருகிறார்கள். இந்த பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என்பது குறித்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசினோம். ``ஹரியானா, பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு அந்த மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது." என்றார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

மேலும், ``கடந்த இருபது வருடங்களாக நமது மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு இல்லை. தேசிய அளவில் இந்திய அணிக்கு விளையாடி வெற்றி பெற்ற நமது மாநில வீரர்கள், பிற பகுதிகளில் உள்ள வடக்கு இரயில்வே, வடகிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே போன்ற இடங்களில் வேலைக்கு முயற்சி செய்கிறார்கள். இந்திய வாலிபால் அணியில் ஏழு ஆண்டுகள் விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயவேல். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். தற்போது பானுமதி. அன்று முதல் இந்த அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``தமிழகத்தில், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, சுற்றுச்சூழல் துறை எனப் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், ஆண்டுக்கு 500 முதல் 600 தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கையைக் கேட்ட முதல்வர் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு
தமிழக அரசு

அதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கிவிட்டன. கண்டிப்பாக இனி மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற எந்த தமிழக வீரரும் வேறு எங்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. அவர்களுக்குத் தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, விளையாட்டு வீரர்ககள் எந்தத் தவறான முடிவுக்கும் செல்லவேண்டாம்" என்று பேசினார்.