Published:Updated:

கள்ளக்குறிச்சி கலவரம்: `309 பேர் கைது; 141 வாகனங்களை மீட்க யாரும் முன்வரவில்லை!' - காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி கலவரம்

கலவரத்தின்போது காவல்துறை வாகனத்துக்கு முதலாவதாக தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி கலவரம்: `309 பேர் கைது; 141 வாகனங்களை மீட்க யாரும் முன்வரவில்லை!' - காவல்துறை தகவல்

கலவரத்தின்போது காவல்துறை வாகனத்துக்கு முதலாவதாக தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கள்ளக்குறிச்சி கலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறிப்போனது. காவல்துறையினரின் வாகனங்கள், பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகளும், இதர வாகனங்களும், பள்ளி வளாகமும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தக் கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு. அதன்படி, சிறப்புப் புலனாய்வுக்குழு போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கலவரத்தின்போது காவல்துறை வாகனங்களுக்கு முதலாவதாக தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சாலையோரம் விட்டுச் செல்லப்பட்ட வாகனம்.
சாலையோரம் விட்டுச் செல்லப்பட்ட வாகனம்.
மாதிரி படம்

சின்னசேலம் அருகேயுள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த நபர், காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக தற்போது கைதுசெய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்போன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரையில், இந்தக் கலவரம் தொடர்பாக 309 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட அளவிலான சிறார்களும் அடக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள்மீது, 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 294(b) (ஆபாசமாகப் பேசுதல்) மற்றும் 323, 324, 352, 332, 336, 435, 436, 379, IPC.r/w.3,4,5.of பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கலவரம் நடைபெற்ற அன்று... தனியார் பள்ளி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து ஏராளமான வாகனங்கள் கிடந்ததாகக் கூறி, அவற்றை கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர்... இந்த வாகனங்கள் கலவரத்துக்கு வந்தவர்கள் விட்டுச் சென்றவையாக இருக்குமா... அல்லது பயத்தால் சிலர் விட்டுச் சென்றவையா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கலவரம்
கலவரம்

இதுவரையில், 141 இருசக்கர வாகனங்களை மீட்டிருக்கும் போலீஸார், அவற்றை சின்னசேலம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த வாகனங்களின் பதிவெண்களைக்கொண்டு அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், ``பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களைக் கேட்டு இதுவரை அதன் உரிமையாளர்கள் யாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கும் நபர்களின் இரு சக்கர வாகனங்கள் அவற்றில் எதாவது இருக்கிறதா என்று விசாரணை செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல், இரு சக்கர வாகனங்களை விட்டுச் சென்றவர்களை வாகனப் பதிவெண்ணைக்கொண்டு அடையாளம் காண முடியும். அதில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்துவருகிறோம். இவற்றில் கலவரத்தின்போது அந்தப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் வாகனங்களும் இருக்கலாம். அவர்கள், பயத்திலும்கூட வாகனத்தைவிட்டுச் சென்றிருக்கலாம். அதில் அப்பாவி மக்களும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அனைத்துத் தரவுகளையும் ஆராய்ந்து அதனடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தனியார் பள்ளி முன்பு காவல்துறை
தனியார் பள்ளி முன்பு காவல்துறை

இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.