Published:Updated:

விழுப்புரம்: அரசு ஏலத்தில் ரூ.43,000; உள் ஏலத்தில் ரூ.39 லட்சம்! -சர்ச்சையான கல்பட்டு ஏரி மீன் ஏலம்

மீன்
News
மீன்

மீன்வளத்துறை சார்பாக, கல்பட்டு ஏரி மீன் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக லட்சங்களில் உள் ஏலம் நடந்திருப்பதாக முகநூலில் வெளியாகியுள்ள வீடியோ, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை மீன்வளத்துறை சார்பில் ஏரிகளில் மீன்பிடிக் குத்தகை ஏலம்விடப்படும். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 45 ஏரிகளில் மூன்று ஆண்டுகளுக்குக் குத்தகை அடிப்படையில் மீன் பிடித்துக்கொள்ள கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, குத்தகை எடுக்க விரும்புவோர் உரிய வழிமுறையின்படி விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த 7, 8 ஆகிய தேதிகளில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரிய நபர்களுக்கு ஏரி குத்தகை எடுப்பதற்கான உறுதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், மீன்வளத்துறை சார்பாக கல்பட்டு ஏரி மீன் ஏலம் 43,000 ரூபாய்க்கு விடப்பட்டுள்ளபோதிலும்... லட்சங்களில் உள் ஏலம் சட்ட விரோதமாக நடந்திருப்பதாக முகநூலில் வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் பதிவில் முதியவர் பேசும் காட்சி
முகநூல் பதிவில் முதியவர் பேசும் காட்சி

பிரகாஷ் என்ற நபர் முகநூலில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் பேசுகிறார். அதில், ``பஞ்சாயத்துத் தலைவர் தமிழ் ஒளி முன்னிலையில்தான் கோயிலில் ஏலம்விட்டோம். கல்பட்டு, நத்தமேடு, சிறுவாக்கூரை சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஏலத்தை எடுக்கலாம். வெளியூர்க்காரங்க யாரும் ஏலம் எடுக்க முடியாது. வேணும்னா... உள்ளூர்க்காரங்க யாராவது எடுத்து வெளியூர்க்காரங்களுக்குக் கொடுக்கலாம். ஆனா, `பணம் கட்டுறேன்'னு சொல்லிட்டா வாக்கு சுத்தமாக இருக்கணும். ஏன்னா இது ஊர் சமாசாரம், பின்னால பிரச்னையா போயிடும். கலெக்டர் வரைக்கும் போயி பெரிய பிரச்னை ஆகிடும். போனமுறை ஏரியை ஏலம்விட்டபோது 47.6 லட்சத்துக்கு போச்சு. இந்த முறை 39 லட்சம் ரூபாய்க்குத்தான் ஏலம் போயிருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏலம் எடுத்த ஆளு, ஏலம் எடுத்த தொகையில 20 லட்சத்தை அப்பவே கட்டிட்டாரு. மீதி தரவேண்டிய காசுல, 10 லட்சத்தை மீன் பிடிக்கப்போகும்போது கட்டணும். மீனைப் பிடிச்சுக்கிட்டு கரையேறி அம்போகம் பண்ணிப் போகும்போது மீதியையும் கொடுத்துடணும். அரசாங்கம் அறிவிக்கிற ஏலத்தில் ஊர்க்காரங்க யார் எடுக்கிறாங்களோ... அவங்க விழுப்புரம் அலுவலகத்தில பணத்தைக் கட்டி ரசீது வாங்கிக்கினு வந்துடுவாங்க. அதுக்கு அப்புறமா ஊருல மேளக்காரரைக் (தண்டோரா) கூப்பிட்டு ஏரி ஏலம்விடப்போறதா அறிவிச்சுடுவாங்க. சொன்ன நேரத்துல எல்லாரும் சரியா வந்து கூடிடுவாங்க.

ஏலம் முடிஞ்சதுக்கு அப்புறமா அந்தக் காசை மூணு ஊர்க்காரங்களும் பிரிச்சு எடுத்துப்பாங்க. போனமுறை 47.6 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அந்த ஆளு 80 லட்சம் ரூபாய்க்கு மேல மீனைப் புடிச்சாரு. அந்த அளவுக்கு பெரிய ஏரிதான். அடுத்த முறை ஏலம் விடும்போது நான் தகவல் சொல்றேன். வாங்க... நாம பண்ணிக்கலாம்" என்று அந்த முதியவர் பேசியிருக்கிறார்ர். இந்த வீடியோவுடன், ``இந்தப் புகாரின் உண்மைத்தன்மையைக் கள ஆய்வு செய்து, 07.12.2021 அன்று நடைபெற்ற இந்த ஏலத்தை ரத்துசெய்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மறு ஏலம் நடத்த வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்தச் சர்ச்சை வீடியோ தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்கநர் (AD) ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு பேசினோம். "எங்கள் துறை மூலம் நேற்றுதான் ஏலமே நடந்தது. உள் ஏலம் விடப்பட்டதாக எனக்கும் புகார் வந்துள்ளது. அதன் உண்மைநிலை என்னவென்று விசாரித்துவிட்டுத் தகவல் கூறுகிறேன்" என்றார். மாவட்ட மீன்வளத்துறை சார்பில் விடப்பட்ட ஏலத்தில் 43,000 ரூபாய்க்கு மீன்பிடிக்க ஏலம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.