Published:Updated:

`சாப்பிட்டதுக்குக் காசு கேட்டது குத்தமா?!'- காஞ்சி ஹோட்டலுக்கு அதிர்ச்சி கொடுத்த நகராட்சி அதிகாரி

`உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள். எங்கள் தரப்பில் தவறு இருந்தால் நோட்டீஸ் அனுப்புங்கள். பிறகு 15 நாள் கழித்து வந்து ஆய்வு செய்யுங்கள்' என அவர்களுக்குப் பதில் அளித்தேன்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

காஞ்சிபுரம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, `நாங்கள் நகராட்சி ஊழியர்கள், காசு கொடுக்க மாட்டோம்’ எனத் தகராறு செய்தவர்களின் சி.சி.டி.வி காட்சியை ஹோட்டல் உரிமையாளர் வெளியிட்டுள்ளார். மேலும், லைசென்ஸைப் புதுப்பிக்க நகராட்சி ஊழியர்கள் 5,000 லஞ்சம் வாங்கி இருப்பதாகக் குற்றம்சாட்டி வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் ``நாங்க சின்ன காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோயில் அருகே `ஓட்டல் சிவாஸ் கேப்’ என்னும் ஹோட்டலை நடத்திவருகிறோம். சுமார் 2.45-மணிக்கு நகராட்சி உதவி ஆய்வாளர்கள் எனச் சொல்லி நான்கு பேர் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு காசு கொடுக்க மாட்டோம் எனச் சின்ன குழந்தை மாதிரி அடம்பிடித்தார்கள்.

ஹோட்டல் உரிமையாளர் தினேஷ்குமார்
ஹோட்டல் உரிமையாளர் தினேஷ்குமார்

`நாங்க முனிசிபாலிட்டி ஆளுங்க… எங்களிடமே காசு கேட்கறீங்களா? உங்க ஓனருக்கு போன் போடுங்க. இல்லைன்னா அது சரியில்லை… இது சரியில்லைன்னு சொல்லி லைசென்ஸைக் கேன்சல் செய்து இழுத்து மூடிவிடுவோம்’ என ஹோட்டல் பணியாளர்களை மிரட்டியுள்ளனர்.

அதன்பிறகு ஹோட்டல் மேற்பார்வையாளர் எனக்குப் போன் செய்து அவர்களிடம் கொடுத்தார். அப்போது நான், `உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள். எங்கள் தரப்பில் தவறு இருந்தால் நோட்டீஸ் அனுப்புங்கள். பிறகு 15 நாள் கழித்து வந்து ஆய்வு செய்யுங்கள். அதன்பிறகு நாங்கள் தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். எடுத்தவுடன் லைசென்ஸை கேன்சல் செய்துவிடுவோம் எனப் பேசாதீர்கள்.

லைசென்ஸைப் புதுப்பிக்க நீங்கள் 5,000 பணம் கேட்டீர்கள். நானும் ஏற்கெனவே 5,000 பணம் கொடுத்தேன். முதலில் லைசென்ஸைப் புதுப்பித்துக் கொடுங்க. அதன்பிறகு கேன்சல் செய்யுங்க’ என்றேன். இதைக் கேட்டவுடன், ` நான் தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு பணியாற்றி இருக்கிறேன்’ என்றார்.

இதைத் தொடர்ந்து சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறிய அவர்கள், பார்க்கிங் ஏரியாவில் உட்கார்ந்துகொண்டு, எப்படிப் பழிவாங்கலாம் எனத் திட்டமிட்டார்கள். தற்போதைய காஞ்சிபுரம் உதவி ஆய்வாளரிடம் சொல்லி, எப்படி மிரட்டலாம் எனத் திட்டமிடும் வீடியோவும் என்னிடம் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகாரிகள் எனக் கூறி மிரட்டியவர்கள்
அதிகாரிகள் எனக் கூறி மிரட்டியவர்கள்

வீடியோ வெளியிட்ட ஹோட்டல் உரிமையாளர் தினேஷ் குமாரிடம் பேசினோம். ``வீடியோவைக் காட்டி சிலரிடம் விசாரித்தபோது பெரிய காஞ்சிபுரம் நகராட்சி உதவி ஆய்வாளர் எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் ஏற்கெனவே திருவள்ளூரில் வேலை செய்யும்போது ஊழல் புகாரில் சிக்கி தண்டனை பெற்ற கையோடு இங்கு வந்திருக்கிறார் எனச் சொன்னார்கள்” என்றார் கொதிப்புடன்.

காஞ்சி நகராட்சி அலுவலக அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன இந்த சி.சி.டி.வி காட்சிகள். இதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள் சிலர்.