பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சைக் கருத்துகள், உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. மத்திய அரசுத் தரப்பில் இந்த விவகாரத்தில் விளக்கமளித்திருந்தாலும், உலக அரங்கில் பா.ஜ.க அரசுக்கு இது பெரும் பின்னடைவு ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் பா.ஜ.க-வின் இளைஞரணித் தலைவரும், மாணவர் பேரவை உறுப்பினருமான ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா முகமது நபிகள் குறித்து அவதூறாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, கான்பூர் போலீஸாருக்கு இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கான்பூர் நகர் காவல்துறையினர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவாவைக் கைதுசெய்தனர். மேலும், அவர் பதிவிட்ட ட்வீட்களும் நீக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கான்பூர் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் விஜய் சிங் மீனா, ``அவரின் பதிவுகள் ஆட்சேபனைக்குரியவை. காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர், அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார். அரசின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. யாரேனும் மத வெறியைத் தூண்டவோ அல்லது சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ முயன்றால், பக்கச்சார்பற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.