Published:Updated:

`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்?' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக் கொள்ளை?!

போலி மதுபானங்கள்
போலி மதுபானங்கள்

காரைக்கால் பகுதியில் குடோன் ஒன்றில் போலி மதுபானங்கள், டாஸ்மாக் கடைகளுக்கான ஸ்டிக்கர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காரைக்கால், தருமபுரம் பகுதி, தில்லை நகர் இரண்டாம் கிராஸில்  தனியாருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு போலி மதுபான ஆலை இயங்கிவருவதாக சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. காரைக்கால் வடக்குப்  பிரிவு காவல் கண்காணிப்பாளர்  வீரவல்லபன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றபோது குடோன் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து அதிரடியாக போலீஸார் உள்ளே நுழைந்து அங்கு சோதனையிட்டபோது அதிர்ச்சி அடைந்தனர்.

போலி மதுபானங்கள்
போலி மதுபானங்கள்

பெட்டி பெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் (1,400 லிட்டர்),சுமார் 1,500 லிட்டர் எரிசாராயம், லட்சக்கணக்கான காலி பாட்டில்கள், பல மூட்டைகளில் தமிழக டாஸ்மாக ஸ்டிக்கர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலி வாகன நம்பர் பிளேட்டுகள், தமிழகத்துக்குக் கடத்துவதற்காக தயார் நிலையிலிருந்த ஒரு பொலிரோ பிக்கப்  வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்.

இதற்கிடையே இங்கிருந்து மீன் ஏற்றும் வாகனத்தில் போலி மதுபானங்கள் கடத்திச் செல்லப்படுவதாக தகவல் கிடைக்கவே, அந்த வேனை  நிரவி அம்பாள்சத்திரம், அக்கரைக்கொல்லை  பகுதியில்  மடக்கினர். ஆனால் போலீஸார் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட டிரைவர் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வாகனமும், அதிலிருந்த மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி மதுபானங்கள்
போலி மதுபானங்கள்

``காரைக்கால் மாவட்டத்தில் போலி மதுபான ஆலைகள் பிடிபடுவது தொடர்கதையாக இருக்கிறது. தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் பிடிபட்டது இதுவே முதல் தடவை.இங்கு தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் பால், மீன் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்போலவும், கூரியர் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்போலவும்  தமிழகப் பகுதிகளுக்கு கடத்திச்  செல்லப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தமிழக காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களை மீறி எப்படி இந்தக் கடத்தல் நடக்கிறது எனத் தெரியவில்லை. டாஸ்மாக் உயரதிகாரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாகவே அனைத்துக் கடைகளுக்கும் போலி மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டுவருகின்றன’’ என்கிறார்கள். காவல்துறையினருக்கும் இது தெரியும் என்கிறார்கள். ``டாஸ்மாக் கடை ஊழியர்கள், நேரடியாக உயரதிகாரிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு இந்த போலி மதுபானங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று கோடிகளில் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்" என்கிறார்கள் இது பற்றி விவரம் அறிந்தவர்கள். காரைக்கால் போலீஸாரிடம் பேசினோம். ``சுமார் ரூ.55 லட்சம் மதிப்புள்ள பொருள்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இந்தத் தொழிற்சாலையை நடத்திவந்த நெடுங்காடு பகுதியைச்  சேர்ந்த அப்பு, காரைக்காலைச்  சேர்ந்த பா.ம.க பிரமுகர்  மஸ்தான் மற்றும் வாசிம் ஆகியோரைத் தேடிவருகிறோம். விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு