Published:Updated:

தங்கம் கடத்தல் வழக்கை தீவிரப்படுத்தக் கோரும் பினராயி விஜயன்! - சுங்கத்துறை அதிகாரி சர்ச்சை

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தங்கம் கடத்தலின் தொடக்கம் முதல் அது எங்கு சென்று சேருகிறது என்பது வரை விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தூதரகங்களுக்கு வரும் பார்சல்களைச் சோதனை நடத்த சுங்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த பார்சலை பெறுவதற்காக தூதரக கடிதத்துடன் வந்த ஸரித் கைது செய்யப்பட்டார். இதில் கேரள ஐ.டி துறையில் பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னா சுரேசுடன் நட்பில் இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவுக்கும் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடத்தல் தங்கம் பயாஸ் பாரிஸ் என்பவர் மூலம் திருச்சிக்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னாவுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை காப்பாற்ற முதல்வர் அலுவலகத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு போன் சென்றதாகவும் முதலில் தகவல் வெளியானது. இதை சுங்கத்துறை இணை இயக்குனர் அனிஷ் ராஜன் மறுத்துள்ளார். அதே சமயம் பார்சலை விட்டுவிடும்படி மூன்று அழைப்புகள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்ததாகவும். அதில் அரசியல் பிரமுகர்களும் அழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அழைப்பு குறித்த ஆடியோ சுங்கத்துறை கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேரளம்: `தூதரகம் பெயரில் கடத்தல்; ரூ.15 கோடி தங்கம்!’- அதிரவைத்த ஐ.டி அதிகாரி ஸ்வப்னா

முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு செல்லவில்லை என மறுத்த சுங்கத்துறை இணை கமிஷனர் அனிஷ் ராஜன் இடதுசாரி அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யில் இருந்ததாகவும். அவர் முதல்வரை காப்பாற்ற முயல்வதாகவும் கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியிருந்தார். இது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்க இணை கமிஷனர் அனிஷ் ராஜன் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் அடுத்தகட்ட விசாரணை குறித்தும், பார்சலை விடுவிப்பதற்காக வந்த போன் அழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

தங்கம் கடத்தல் வழக்கு குறித்து யு.ஏ.இ தூதரக தலைவரிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரகத்தில் பணிபுரியும் சிலருக்கு இந்தக் கடத்தலில் பங்கு இருப்பதாக சுங்கத்துறை சந்தேகிக்கிறது. எனவே, விசாரணைக்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்க முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

`கேரளாவுக்கு நிதியுதவி; நினைவுகூர்ந்த முதல்வர் பினராயி விஜயன்!’ - சுஷாந்த் முடிவால் கலங்கும் ரசிகர்கள்

அந்தக் கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, ``திருவனந்தபுரம் விமானநிலையம் வழியாகத் தூதரக பார்சல் என்ற பெயரில் தங்கம் கடத்திய வழக்கு மிகவும் தீவிரமானது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் செயல். மத்திய அரசின் அனைத்து துறைகளையும் களத்தில் இறக்கி தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். தங்கம் கடத்தலின் தொடக்கம் முதல் அது எங்கு சென்று சேருகிறது என்பது வரை விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு