கேரளா: `தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு வந்த அழைப்பு?’ -மாற்றப்பட்ட முதல்வரின் செயலர்

12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வப்னா சுரேஷுக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய பதவி எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஸ்ரித்துடன் கூட்டணி வைத்து தங்கம் கடத்தியதாகக் கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறை ஆபரேஷனல் மேலாளராக இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கெனவே கிரைம் பிரான்ச் போலீஸாரால் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படும் ஸ்வப்னாவை தலைமைச் செயலகத்தில் பணியில் அமர்த்தியது யார் என்றும், விமான நிலையத்தில் தங்கம் சிக்கியபோது சுங்க அதிகாரிகளைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடர்புகொண்டவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியிருந்தார். இந்த நிலையில் கேரள ஐ.டி துறை செயலாளரும், முதல்வரின் செயலாளருமான சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தகவல் கசிந்தது.

இதைத் தொடர்ந்து சிவசங்கரன் முதல்வரின் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம் ஐ.டி செயலர் பதவி நீக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, ஐ.டி செயலாளர் பதவியில் அவர் நீடிப்பதாகத் தெரிகிறது. சிவசங்கரனின் பொறுப்புகள் பீர்முஹம்மது ஐ.ஏ.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் சிவசங்கரன் குறித்து முடிவு செய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மாற்றப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவசங்கரன் ஆறு மாதம் விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பட்டப்படிப்பு முடித்தாலே தலைமைச் செயலகத்தில் பணி கிடைப்பது அரிது. ஆனால்,12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வப்னா சுரேஷுக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய பதவி எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் ஸ்வப்ன சுரேஷ் குடியிருக்கும் திருவனந்தபுரம் முடவன்முகளில் உள்ள பிளாட்டில் நம்பர் பிளேட் இல்லாத கார்கள் அடிக்கடி வந்து சென்றதாகக் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வாரத்துக்கு ஒருமுறை ஸ்வப்னாவின் பிளாட்டுக்கு முதியவர் ஒருவர் வந்து செல்வதாகவும், அவர் ஸ்வப்னாவை சந்தித்து பேசுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இரவு 10 மணிக்கு குடியிருப்பின் கேட் மூடப்படும் நிலையில். 10 மணிக்கு மேல் கேட் மூடப்படாதது குறித்து குடியிருப்புவாசிகள் கேட்டதற்கு ஸ்வப்னா சுரக்ஷின் கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் கடத்தல் ஸ்வப்னா வழக்கில் தோண்டத்தோண்ட பூதம் கிளம்பும் என்கிறார்கள்.