Published:Updated:

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: லாக்கரில் இருந்த பணம், நகை... ஸ்வப்னாவுக்குக் கிடைத்தது எப்படி?

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

`நான் தலைமைச் செயலகத்தில் இல்லாத சமயத்திலும் ஸ்வப்னாவும் ஸரித்தும் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள். நான் இல்லாதபோது யாரைப் பார்க்க அவர்கள் வந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை’ என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ., சுங்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்தின. இப்போது அமலாக்கத்துறை விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலரது வாக்குமூலங்களால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்குமேல் பணம், ஒரு கிலோ தங்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்வப்னாவும், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் வேணுகோபாலனும் சேர்ந்து ஒரு வங்கியில் லாக்கர் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறை, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் வேணுகோபாலனிடன் விசாரணை நடத்தியது. வேணுகோபாலன் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், ``கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனின் உத்தரவின்பேரில்தான் ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டாக லாக்கர் எடுக்கக் கையெழுத்து போட்டேன். இதனால் எனக்குச் சட்டச்சிக்கல் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. லாக்கரிலிருக்கும் பணமும் நகைகளும் எங்கிருந்து வந்தன என எனக்குத் தெரியாது" என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

ஆனால் ஸ்வப்னா இது பற்றி அளித்த வாக்குமூலத்தில், ``கேரள அரசின் லைஃப் திட்டத்தின்கீழ், துபாய் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுத்தது. அதற்காக யு.ஏ.இ தூதரகம் மூலம் எனக்கு ஒரு கோடி ரூபாய் கமிஷன் கிடைத்தது. அந்தப் பணத்தை நான் வங்கியில் டெப்பாசிட் செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் கூறியதன்பேரிலேயே லாக்கரில் பணத்தை வைத்தேன்" என்றார். லைஃப் வீடுகள் கட்டும் திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ஸ்வப்னா, சிவசங்கரன் கோஷ்டிக்கு 4.25 கோடி கமிஷனாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பணத்தை அவர்கள் பங்கு பிரித்து எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. `இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’ என அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

அமலாக்கத்துறைக்கு சிவசங்கரன் அளித்த வாக்குமூலத்தில், ``நான் தலைமைச் செயலக அலுவலகத்தில் இல்லாத சமயத்திலும் ஸ்வப்னாவும் ஸரித்தும் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள். நான் இல்லாதபோது யாரைப் பார்க்க அவர்கள் வந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார். ஆனால், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் சிவசங்கரனுடன் மட்டுமே நட்பில் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, `தலைமைச் செயலக சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தால்தான் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியும்’ என இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., சுங்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளன.

ஸ்வப்னா வழக்கு
ஸ்வப்னா வழக்கு

இந்த நிலையில் ஸ்வப்னாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த, கேரள போலீஸார் முயன்றுவருகின்றனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மேலதிகாரிகள்மீது பொய்ப் புகார் கொடுத்தது குறித்து ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக கேரள போலீஸார் இந்த முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். தங்கக் கடத்தல் வழக்கில் 25 குற்றவாளிகளில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்
அடுத்த கட்டுரைக்கு