Published:Updated:

ஆட்கள்[கடத்தல்] வேலை செய்கிறார்கள்!

ஆட்கள்[கடத்தல்] வேலை செய்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்கள்[கடத்தல்] வேலை செய்கிறார்கள்!

இதே போன்றதொரு மாஃபியாதான், மிருகக் கடத்தல் மாஃபியாவும்.

காம்ரேட்களுக்குக் கட்டம் சரியில்லை கேரளாவில்! 30 கிலோ தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது, பினராயி விஜயனுக்கு எதிராக பி.ஜே.பி முதல் காங்கிரஸ் வரை எதிர்க்கட்சிகள் போர்க்கொடி என சூடான பீஃப் ப்ரை போல அனல் கொதிக்கிறது கேரளாவில். நம் தமிழ் சினிமாவிலோ

எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி, சூர்யா படம் வரை கடத்தல் நுட்பங்களை வகை வகையாக விருந்து வைத்துவிட்டார்கள். ஆனால், நிஜக்காட்சிகள் சினிமாவை மிஞ்சும் ரகம். ஓரிரு சம்பவங்களைப் பார்த்தால், இந்தக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கையும் அவர்கள் செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கேஸ் ட்ரபுள் மேடம்... அதான் உப்பியிருக்கு...”

நவ.5, 2019 அதிகாலை இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, தெரசா என இரண்டு பெண்கள் வந்திறங்கினர். ‘டிப் டாப்’ உடையில் வந்தவர்களைச் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அவர்கள் வருகையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணான பதிலே கிடைத்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் தனியறையில் அவர்களைச் சோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இருவரின் வயிறும் உப்பியிருப்பதைப் பார்த்த பெண் அதிகாரி ஒருவர், “ஏம்மா வயிறு இப்படி உப்பியிருக்கு?” எனக் கேட்க, “கேஸ் ட்ரபுள் மேடம். அதான் உப்பியிருக்கு” என கோரஸ் பாடியுள்ளது இருவரணி.

ஆட்கள்[கடத்தல்] வேலை செய்கிறார்கள்!

தங்கம், போதைப் பொருள்களைக் கடத்துபவர்கள், அவற்றை சிறிய ட்யூப் மாத்திரைகளில் அடைத்து விழுங்கிவிடுவார்கள். பொருள்களைச் சேர்க்க வேண்டிய இடம் வந்தவுடன் இனிமா கொடுத்து வயிற்றிலிருக்கும் மாத்திரைகளை வெளியே எடுப்பது ஒரு கடத்தல் டெக்னிக். இது தெரிந்ததால் சந்தேகம் கலையாத அந்தப் பெண் அதிகாரி, உடனடியாக பாத்திமா, தெரசா இருவரையும் மருத்துவமனையில் இனிமா கொடுத்து செக் செய்யுமாறு உயரதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

வழக்கமாக, இதுபோன்ற கேஸ்களை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஏர்போர்ட் காவல்நிலையத்தின் காவலர்களுடன்தான் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த விதியை மீறி பல்லாவரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இருபெண்களையும் சுங்க அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு இவர்களுக்காகவே காத்திருந்த ஒரு ரவுடி கும்பல், இரண்டு பெண்களையும் கடத்திச் சென்றுவிட்டது. விவகாரம் பல்லாவரம் காவல்துறையில் புகாராகிவிட, ஒருசில மணிநேரத்தில் மொத்த சென்னைக் காவல்துறையும் சல்லடை போட்டு இரண்டு பெண்களையும் தேட ஆரம்பித்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலையில் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்த ஒரு வெள்ளைக் கார், இரண்டு பெண்களையும் பார்க்கிங் ஏரியாவில் இறக்கிவிட்டு வந்த வேகத்தில் மறைந்துவிட்டது. தங்களின் பாஸ்போர்ட் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டதால், தப்பிக்க வழிதெரியாது நின்ற இரு பெண்களும் சுங்க அலுவலகர்கள் முன்பு போய் நின்றனர். “ஏம்மா, உங்களை ஊரே தேடிட்டு இருக்கு. எங்க போனீங்க?” என்று சுங்க அதிகாரிகள் விசாரித் துள்ளனர். இதற்குப் பின்னர்தான், இரு பெண்களையும் கடத்திச் சென்ற ரவுடிகள் கும்பல் அவர்களுக்கு இனிமா கொடுத்து மொத்தத் தங்கத்தையும் சுருட்டிக் கொண்டது தெரியவந்தது. சுங்க இலாகா, சென்னைக் காவல்துறை என அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டுத் தங்கத்துடன் தப்பிய கும்பலை இன்னும் பிடிக்கவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை, திருச்சி சர்வதேச விமான நிலையங்கள் தான் தங்கக் கடத்தலுக்கு ‘ஹப் பாயின்ட்.’ ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தங்கம் அதிகமாகக் கடத்தி வரப்படுகிறது. இதில் புரளும் கோடிக்கணக்கான பணம் பல தரப்புக்கும் பிரித்துக் கப்பமாகப் போய்விடுவதால், பெயருக்கு ஓரிரு கேஸ்களைப் பதிவு செய்வதோடு யாரும் மேற்கொண்டு விசாரிப்பதில்லை.

ஆண்டுக்கு 150 டன் கடத்தல் தங்கம்:

சென்னை மண்டல சுங்கத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினேன். “கடத்தல் தங்கம் கொண்டு வருபவர்களுக்கு தங்களிடம் தங்கம் கொடுத்த நபர், தங்கத்தைக் கொடுக்க வேண்டிய நபர் என இருவரை மட்டுமே தெரிந்திருக்கும். அந்த இருவருமே, பெயர் உட்பட போலி அடையாளங்களோடுதான் இருப்பார்கள். சுங்கப் பரிசோதனையை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், ஏர்போர்ட்டில் இருந்துகொண்டே தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பரில் தங்கத்தைக் கடத்தி வருபவர்கள் தொடர்புகொள்வார்கள். சிறிது நேரத்தில் அவர்களைச் சந்திக்கும் கடத்தல் பார்ட்டிகள், தங்கத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய கமிஷன் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பறந்துவிடும்.

ஸ்வப்னா
ஸ்வப்னா

ஒருவேளை கடத்தல் தங்கம் பிடிபட்டாலோ, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றாலோ, உடனடியாக அந்த சிம் கார்டைக் கடத்தல் பார்ட்டிகள் உடைத்து விடுவார்கள். நம்மால் ட்ரேஸ் செய்யக்கூட முடியாது.

தங்கத்தைக் கடத்தி வருபவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கி, அவர்களைச் சிறையில் அடைத்தாலும் 60 நாள்களில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள். பிறகு அவர்களைப் பிடிப்பதும் குதிரைக்கொம்புதான். தங்கம் எங்கேயிருந்து வந்தது, யாருக்குப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒருவருடத்திற்கு தோராயமாக 150 டன் கடத்தல் தங்கம் இந்திய மார்க்கெட்டில் புழங்குகிறது” என்றார்.

சிவப்பு அணில்... நீலப் பல்லி!

டிசம்பர் 23, 2019-ல் தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்தவர்களைச் சோதனையிட்ட சுங்கத்துறையினர் ஒருவரிடம் இருந்த எட்டுக் கூடைகளைப் பரிசோதித்தனர். கூடை நிறைய கங்காரு எலி, புல்வெளி நாய், சிவப்பு அணில், நீலப் பல்லி என மிருகங்கள் இருப்பதைப் பார்த்து விக்கித்தவர்கள், “என்னய்யா இது?” என விசாரிக்க, “என் குழந்தைங்க விளையாடுறதுக்காக பாங்காங்ல வாங்கினேன் சார்” என அவர் அசடு வழிந்துள்ளார். இந்திய சட்டப்படி உயிருள்ள பிராணிகளைக் கடத்துவது தடை செய்யப்பட்டிருப்பதால் அவரைச் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

ஆம். தங்கக் கடத்தலுக்கு இணையாக மிருகக் கடத்தலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. தங்கத்திற்கு துபாய் என்றால், மிருகங்களுக்கு பாங்காங். அரிய வகை மிருகங்கள் வளர்ப்பில் அலாதிப் பிரியம் உள்ளவர்களிடையே இதற்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் ரேட்டும் அதிகம். ஆவடி, செங்குன்றம், பல்லாவரம் ஏரியாக்களில் கடத்தல் பிராணிகள் விற்பனையும் நடக்கிறது. கோடிக்கணக்கில் லாபம் புரளும் தொழில் என்பதால் போட்டியும் அதிகம். அதனால், போட்டுக் கொடுப்பவர்களும் அதிகம். இதனால், தான் அடிக்கடி நட்சத்திர ஆமை, அரியவகை பல்லிகள் பிடிபடும் செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது.

இவை தவிர, ஈரான் குங்குமப் பூ, மலேசிய மதுபானங்கள், சிங்கப்பூர் எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள், சிரியா அழகுச்சாதனப் பொருள்கள் என வகை வகையாகக் கடத்தல் பொருள்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இது ஒரு பெரிய மாஃபியா

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஈஸ்வரிடம் பேசினோம். “இந்தக் கடத்தல்களைப் பொறுத்தவரை, சிலவற்றை சுங்கத்துறையும் சிலவற்றை வருவாய் புலனாய்வுப் பிரிவும் கையாள்கின்றன. எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், சிறிய அளவு மதுபானங்கள் போன்றவை பிடிபட்டால், அவற்றுக்கு வரியும் அபராதமும் விதிக்க சுங்கத்துறைக்கு அதிகாரம் உண்டு. இதைத் தாண்டி, தங்கம், அரிய வகை உயிரினங்கள் கடத்தினால் சிறைதான். அதுவும் ஓரிரு மாதங்கள் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். மிகவும் சீரியஸான கேஸ்களுக்கு மட்டுமே ‘காபிஃபோசா’ சட்டத்தைப் பயன்படுத்து கின்றனர்.

தங்கக் கடத்தலில் குருவிகள் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது ‘கார்கோ’ எனப்படும் சரக்கு வழி மார்க்கமாகவே பெரும்பாலான கடத்தல் நடைபெறுகிறது. விமானப் பயணியின் பெயரில் தங்கம் பார்சலாகி, அப்பயணி பயணிக்கும் விமானத்திலேயே இந்தியா வந்திறங்கும். இங்கு சரக்குப் பிரிவில் இருக்கும் அதிகாரிகளைச் சரிகட்டி, தங்கத்தை வெளியே எடுத்துவிடுவார்கள். இவ்வளவுக்கும் தன் பெயரில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது அந்தப் பயணிக்கே தெரியாது. மற்றபடி, சுங்க இலாகா செக்கிங்கில் மாட்டும் தங்கமெல்லாம் துண்டு துக்கடாதான். பெரிய அளவு தங்கக் கடத்தல், சரக்குப் பிரிவில்தான் கையாளப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற தங்கக் கடத்தலை எடுத்துப்பார்த்தால், அது யாருக்காகக் கொண்டு செல்லப்படுகிறதோ, அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கவே மாட்டார்கள். கடத்தியவர்களோடு வழக்கும் முடிந்துவிடும். சரக்கு கம்பெனிகள், சரக்குப் பிரிவைக் கவனிக்கும் சுங்க அதிகாரிகள், ஒப்பந்தப் பணியாளர்கள், போலீஸ் என இந்த முடிச்சு அவிழாத வரை எந்த மாற்றமும் ஏற்படாது. இதே போன்றதொரு மாஃபியாதான், மிருகக் கடத்தல் மாஃபியாவும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் டாக் ஷோக்களில் வெற்றியடைந்த நாய்களை வளர்ப்புப் பிராணிகள் போர்வையில் இந்தியா கொண்டு வருவார்கள். இங்குள்ள நம் நாட்டு இன நாய்களுடன் அவற்றைப் பழகவிட்டு இனவிருத்தி செய்ய வைப்பார்கள். இந்நாய்களுக்குக் குட்டிகள் பிறந்தவுடன், ‘டாக் ஷோவில் வெற்றிபெற்ற நாயின் குட்டி’ என்ற அடைமொழியுடன் அக்குட்டிகள் லட்சக் கணக்கில் விலை போகும். மருந்து, அதிர்ஷ்ட நம்பிக்கைக்காகப் பாம்புகள் இந்தியா விலிருந்து அதிகளவில் கடத்தப்படுகின்றன. கப்பல் மூலமாகச் சென்றால் நீண்ட நாள் பிடிக்கும் என்பதால், விமானம் மூலமாக மட்டுமே இப்பிராணிகள் கடத்தப்படுகின்றன.

ஆட்கள்[கடத்தல்] வேலை செய்கிறார்கள்!

இந்தக் கடத்தல்களில் அரசியல்வாதிகள் அல்ல, அதிகாரிகளின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. ஒருமுறை சென்னை பர்மா பஜார் ஏரியாவுக்குச் சென்று பாருங்கள். அங்கு விற்கப்படாத கடத்தல் பொருளே இருக்காது. இது அதிகாரிகளுக்குத் தெரியாதா? உரிய பங்கு கிடைப்பதால் ஒருவரும் வாய் திறப்பதில்லை. அரசுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அரிய வகை உயிரினங்கள் அழிவுக்கும் இவை வழி வகுக்குகிறது” என்றார் வழக்கறிஞர் ஈஸ்வர்.

ஸ்வப்னா சுரேஷின் கைது, இந்தியாவில் நடைபெறும் தங்கக் கடத்தலின் வீரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஒரு தூதரகத்தின் தொடர்பைப் பயன்படுத்தி, தங்கம் கடத்தும் அளவுக்கு நெட்வொர்க் அமைந்திருக்கிறது என்றால், இக்கடத்தல் கும்பலின் ஆதிக்கம் எங்கேயெல்லாம் பரந்து விரிந்திருக்கும் என்பதை நீங்களே யூகிக்கலாம்.