Published:Updated:

`ஐ.ஐ.டி -யில் மட்டும் ஏன் இவ்வளவு பிரிவினைகள்?’- ஃபாத்திமா விவகாரத்தில் கொதிக்கும் கேரள அமைச்சர்

ஒருபோதும் வேறுபாடுகள் வந்துவிடக்கூடாது என்று நாம் நினைக்கும் இடங்களில்தான் பிரிவினைகள் நடக்கின்றன. படிப்பு அதிகரிக்கும்போது பிரிவினைகள் குறையும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், அதற்கு மாறாக இங்கு நடக்கிறது.

ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா
ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா

சென்னையில் ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அதீத திறமை உள்ளவர்தான் ஃபாத்திமா. அவர் இதுவரை படித்த சான்றிதழ்களை ஆய்வு செய்தாலும் முதல் செமஸ்டரின் இன்டர்னல் மதிப்பெண்ணைப் பார்த்தாலும் அது தெரியும். நம் நாட்டில் பெரிய கல்வி நிறுவனங்களில் பலதரப்பட்ட பிரச்னைகளால் மாணவர்கள் மரணம் அடைவது தொடர்கதையாக உள்ளது. இந்தியாவின் பெரிய கல்வி நிறுவனங்களில் மதம், சாதிகளின் பெயரில் பிரிவினைகள் நடக்கிறது என்பதை தனிக் கவனத்துடன் பார்க்க வேண்டும்.

கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல்
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல்

சென்னை ஐ.ஐ.டி-யில் இதற்கு முன்பும் இதே ஆசிரியர்கள்தான் பாடம் நடத்தினர். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் நம் நாட்டில் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் பல ஆசிரியர்களின் மனதில் உறங்கிக்கிடந்த விகாரங்களை வெளியே கொண்டுவந்து செயல்படுத்துவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. மத்திய அரசு இதுகுறித்து தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் நல்ல திறமை மிக்க மாணவ, மாணவிகள் இதுபோன்ற கல்வி நிலையங்களில் சீட் கிடைத்தாலும் போகாமல் இருக்கும் நிலை ஏற்படும்.

ஒருவேளை இப்படியான பெரிய நிறுவனங்களில் பிள்ளைகள் படிக்க வரவேண்டாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களை பின்னோக்கி நகர்த்தவும் இதுபோன்ற செயல்களுக்கு வழிவகை செய்பவர்களின் லட்சியமாக இருக்குமோ என்று பரிசோதிக்க வேண்டும். ஐ.ஐ.டி-யில் படிப்பவர்களும், பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களில் பிரிவினைகள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.

ஃபாத்திமாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் அமைச்சர் ஜலீல்
ஃபாத்திமாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் அமைச்சர் ஜலீல்

ஒருபோதும் வேறுபாடுகள் வந்துவிடக் கூடாது என்று நாம் நினைக்கும் இடங்களில்தான் பிரிவினைகள் நடக்கின்றன. படிப்பு அதிகரிக்கும்போது பிரிவினைகள் குறையும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், அதற்கு மாறாக இங்கு நடக்கிறது. பிரிவினை பாகுபாட்டால் இந்தப் பிரச்னை வந்ததா என்று போலீஸ் விசாரணையில் தெளிவாகும். ஃபாத்திமாவின் சில குறிப்புகள் கிடைத்துள்ளன. அதுகுறித்து விசாரித்தால் எந்தமாதிரியான கஷ்டம் அவள் அனுபவித்தாள் என்று தெரியவரும்.

மத ரீதியாக என்று மட்டும் நாம் உறுதியாகக் கூற முடியாது. பொதுவாகவே நம் நாட்டில் பிரிவினைகளை பின்னோக்கு சமூகங்களிடம் காட்டுவது தினமும் நடக்கும் செயலாக மாறுகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசிடம் கேரள முதல்வர் பேசியிருக்கிறார். தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்ந்தால் பிள்ளைகள் படிக்கச் செல்லத் தயங்கும் நிலையை ஏற்படுத்தும். தேர்வில் இன்டர்னல் மதிப்பெண் மூலம் மாணவரை ஓர் ஆசிரியர் நினைத்தால் தோற்கடிக்க முடியும் என்ற நிலையை மாற்ற கேரளத்தில் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். ஒரு ஆசிரியர் ஒரு மாணவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்த ஒருகாலத்திலும் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.