Published:Updated:

கேரளா: ரூ.150 கோடி தங்க நகை மோசடி! - மஞ்சேஸ்வரம் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கைது

முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கமருதீன்
முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கமருதீன்

கமருதீன் எம்.எல்.ஏ சேர்மனாக இருக்கும் ஃபேஷன் ஜுவல்லரியில் சுமார் 800 பேரிடமிருந்து 150 கோடி ரூபாய் வரை முதலீடாகப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் வாங்கியவர்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கமருதீன். காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கூட்டணியான யூ.டி.எஃப்-பின் காசர்கோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கமருதீன் இருக்கிறார். கமாருதீன் சேர்மனாக இருக்கும் ஃபேஷன் ஜுவல்லரி நிறுவனத்தில் தங்க நகைகளுக்கான முதலீடுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் சுமார் 800 பேரிடமிருந்து 150 கோடி ரூபாய்வரை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் வாங்கியவர்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை. நகையோ அல்லது செலுத்திய பணமோ கிடைக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிந்ததை அடுத்து பணத்தை முதலீடு செய்தவர்கள், கமருதீன் நகை மோசடி செய்திருப்பதாக சந்தேரா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

நகை
நகை
Representational Image

புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து ஏ.எஸ்.பி விவேக் குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், நேற்று மாலை எம்.எல்.ஏ கமருதீன் கைதுசெய்யப்பட்டார். ஜுவல்லரி கோல்டு முதலீட்டுக்காகப் பணம் வாங்கி, மோசடி செய்யப்பட்டதாக இதுவரை 117 புகார்கள் வந்திருப்பதாகவும். அவற்றில் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருவாரூர்: `ரூ.20 லட்சம் பணம்; ரூ.12 லட்சம் நகை மாயம்!’ - அதிரவைத்த கூட்டுறவு வங்கி மோசடி!

முதற்கட்ட விசாரணையில் கமருதீன் 13 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கமருதீன் மீது இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ``புகார்தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மோசடித் தொகையும் அதிகரிக்கும்’’ என்கிறனர் போலீஸார். மேலும் ஃபேஷன் ஜுவல்லரி எம்.டி-யையும் கைதுசெய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கமருதீன்
கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கமருதீன்

இந்தநிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கமருதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``என்னைக் கைதுசெய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு கூறியதால்தான் விசாரணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. நோட்டீஸ்கூட வழங்காமல் என்னை விசாரணைக்காக அழைத்து, கைதுசெய்திருக்கிறார்கள். நான் கோர்ட்டில் அளித்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதுவரை காத்திருக்காமல் என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். இதன் மூலம் என்னை அரசியல்ரீதியாக தகர்க்க முடியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு