Published:Updated:

``சுல்தானின் கிரீடம் விற்றதில் ரூ.70,000 கோடி வரவிருக்கிறது"- `மோசடி' மோன்சன் மாவுங்கல் கைது!

பழங்காலப் பொருள்கள் பலவும் தன்னிடம் இருப்பதாகக் கூறி பல பணக்காரர்களை ஏமாற்றி கோடிகளை சுருட்டியிருக்கிறார் மோன்சன் மாவுங்கல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேர்த்தலைப் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் மோன்சன் மாவுங்கல் தன்னிடமிருந்து 6.27 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகப் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தொல் பொருள்களை விற்பனை செய்துவருவதாகவும், பழங்காலப் பொருள்களைச் சேகரிப்பவராகவும் கூறிக் கொண்டு வலம்வந்திருக்கிறார். சில தெலுங்கு சினிமாக்களிலும் இவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து க்ரைம் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் சுல்தானின் கிரீடம் விற்ற வகையில் 70,000 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது. அதற்கு வரி செலுத்துவதற்காகப் பணம் தேவைப்படுவதாக மோன்சன் மாவுங்கல் சில ஆதாரங்களைக் காட்டிப் பணம் பெற்றிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. தற்போது பணம் கொடுத்தால் அதற்கு பதிலாக வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் வங்கி லோன் வாங்கித்தருவதாகக் கூறியதுடன் அதற்கான வங்கி ஆவணங்கள் சிலவற்றையும் காட்டியிருக்கிறார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மோன்சன் மாவுங்கல்லைக் கைதுசெய்துள்ளனர்.

`திருமணம் செய்துகொள்ளலாம்’ - 50 பெண்களிடம் லட்சக்கணக்கில் வசூல்;`மோசடி’ மாப்பிள்ளை கைது!
மேன்சனின் மியூசியத்திலுள்ள ஓலைச்சுவடிகள்
மேன்சனின் மியூசியத்திலுள்ள ஓலைச்சுவடிகள்

மோன்சன் மாவுங்கல்லிடமிருந்து ஆடம்பர கார்கள், கேரவன்கள் என 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தன்னிடம் இரிடியம் போன்ற உலோகம் இருப்பதாகக் கூறிப் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மேலும் பழங்காலப் பொருள்கள் பலவும் தன்னிடம் இருப்பதாகக் கூறி பல பணக்காரர்களை ஏமாற்றி கோடிகளைச் சுருட்டியிருக்கிறார் மோன்சன் மாவுங்கல். இது குறித்து சிலர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில் வங்கியில் லாக்காகியிருக்கும் 2.62 லட்சம் கோடி ரூபாயை மீட்பதற்கான செலவுக்குப் பணம் வேண்டும் என 10 கோடி ரூபாய் வாங்கிவிட்டு பின்னர் ஏமாற்றியதாக முதல்வரிடம் ஒன்றாகச் சென்று புகாரளித்த ஆறு பேர் கூறியுள்ளனர். மோன்சன் தனியாக மியூசியம் ஒன்று வைத்திருக்கிறார். அதில் பல வி.வி.ஐ.பி-க்கள் வந்து சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா என அந்தப் பட்டியல் நீளமானது. மியூசியத்தில் வி.வி.ஐ.பி-க்கள் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பலரிடம் காட்டி தன்னிடம் இருப்பவை அனைத்தும் பழங்காலப் பொருள்கள்தான் என நம்பவைத்திருக்கிறார்.

மோன்சன் மாவுங்கல்
மோன்சன் மாவுங்கல்

அதுமட்டுமின்றி டி.ஜி.பி., முன்னாள் அமைச்சர்கள் என முக்கியப் புள்ளிகள் தனக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறி பலரிடம் பண மோசடி செய்திருக்கிறார். அவரது மியூசியத்திலுள்ள பழங்காலப் பொருள்கள் எனக் கூறப்படும் பொருள்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் இப்போது பல கோடி ரூபாய்க்கான பங்களாக்களுக்கும் சொத்துகளுக்கும் அதிபதியாக இருக்கிறார். அது குறித்த தகவல்களைத் திரட்டிவருகின்றனர் கேரள போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு