Published:Updated:

கேரளா: `திருச்சூர் ஹை-வே வழிப்பறி வழக்கில் அடிபடும் பாஜக நிர்வாகிகள் பெயர்?!'-திடுக்கிடும் தகவல்கள்!

கோடகரா ஹை-வே வழிப்பறி வழக்கு
கோடகரா ஹை-வே வழிப்பறி வழக்கு

வழக்கில் தாங்கள் சந்தேகிக்கும் நபர்கள் அனைவருமே பாஜக நிர்வாகிகள் என்பதாலும், கொள்ளை சம்பவம் சரியாகத் தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக நடந்திருப்பதாலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பாஜகவின் தேர்தல் பணப்பட்டுவாடாவிற்கு பயன்படுத்தப்பட இருந்த பணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

கேரளாவில் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் நடந்து முடிந்த அடுத்த நாள் (ஏப்ரல்-7) திருச்சூர் மாவட்டம் கோடகரா காவல்நிலையத்தில் வழிப்பறி கொள்ளை குறித்த புகார் ஒன்று பதியப்படுகிறது. அந்த புகார் மனுவினை கோழிக்கோட்டைச் சேர்ந்த சமீர் சம்சுதீன் என்பவர் காவலர்களிடம் அளிக்கிறார். அந்த புகாரில் சமீர், தான் ஏப்ரல் 3-ம் தேதியன்று காரில் 25 லட்சம் ரூபாய் பணத்துடன் கொச்சியில் நில விவகாரம் தொடர்பாகச் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது கோடகரா அருகே மேம்பாலம் ஒன்றினை கடக்கும் போது மர்ம வழிப்பறி கும்பல் ஒன்று தன் வாகனத்தை மறித்து தன்னைத் தாக்கி 25 லட்சம் ரூபாய் ரொக்கத்தைத் திருடிச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கோடகரா காவல்நிலையம்
கோடகரா காவல்நிலையம்

சமீரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். ஏப்ரல் 3-ம் தேதியன்று பணம் கொள்ளையடிக்கப்பட்ட போதிலும் சமீர் நான்கு நாள்கள் கழித்து புகார் அளித்தது கவால்துறையினருக்கு சந்தேகத்தைத் தூண்டியது. தொடர்ந்து முதற்கட்டமாக ஹை-வே வழிப்பறி கொள்ளையர்களைப் பற்றி விசாரித்ததில் 25 லட்சத்திற்கும் அதிகமான தொகை சமீரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளை கும்பல் மேம்பாலத்தில் செயற்கையாகப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அதைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தொகை 25 லட்சத்திற்கும் அதிகமானது என்றதும் போலீஸார் விசாரணையை வேறு கோணத்திற்கு முடுக்கி விட்டனர்.

யாருக்காக?, யார் கொள்ளையடித்தது?, சமீர் எதற்காகத் தொகையைக் குறைத்துக் கூறினார்? என்ற பல கேள்விகளுடன் விசாரணை தீவிரமானது. சமீர் மீது சந்தேகம் எழுந்ததன் காரணத்தால் சமீர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். மேலும், சமீர் புகாரளிக்க வரும்போது தனியாக வரவில்லை என்பதனை உறுதி செய்த போலீசார் அவருடன் புகாரளிக்க வந்த நபர் குறித்து விசாரித்தனர். அதில் உடன் வந்த நபர் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தர்மராஜன் என்பது தெரியவந்தது. மேலும், தர்மராஜன் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தன்னுடையது என்றும், தான் பலபேரிடம் கடன் வாங்கி அதைத் திரட்டி இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களில் தீபக் என்பவன் போலீஸில் பிடிபட்டதைத் தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தில் மேலும் 19 பேருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது. தீபக் அளித்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதில் கொள்ளையர்களும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கத் தொடங்கியது. ஆனால், சமீர் கூறியதை போல 25 லட்சம் அல்ல, பல கோடி ரூபாய். அதனையடுத்து, சமீரையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தர்மராஜனையும் போலீசார் விசாரித்ததில் தர்மராஜன் தனக்கு பாஜகவின் யுவ மோர்ச்சா தலைவர் சுனில் நாயக் என்பவர் அந்த பணத்தைப் பல பேரிடம் கடன் வாங்கி கொடுத்ததாகத் தெரிவித்தார். சுனில் நாயக்கிடம் இது குறித்து போலீஸார் கேட்டபோது கொள்ளையடிக்கப்பட்ட பணம் 25 லட்சம் இல்லையென்றும் தோராயமாக 3.5 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், கட்சிப் பணிகளுக்காக தான் அதைக் கொடுக்கவில்லை என்றார். வழக்கில் பாஜக நிர்வாகிகளின் பெயர்கள் அதிகளவில் அடிபடவே, போலீஸார் விசாரணையை பாஜகவினர் பக்கம் திருப்பினர். வழக்கும் கோடகரா போலீசாரிடம் இருந்து (SIT) சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டது.

பாஜக
பாஜக

வழக்கு தொடர்பாகக் கொள்ளைக்குப் பின்னால் இருக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டதில் இதுவரை 1.5 கோடி ரூபாயினை போலீஸார் மீட்டிருக்கின்றனர். வழக்கில் போலீஸார் சந்தேகிக்கும் நபர்கள் அனைவருமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் என்பதாலும், கொள்ளை சம்பவம் சரியாகத் தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக நடந்திருப்பதாலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பாஜகவின் தேர்தல் பணப்பட்டுவாடாவிற்கு பயன்படுத்தப்பட இருந்த பணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சமீர் குறைத்துச் சொல்லியதும், பணத்திற்கான சோர்ஸ் (Source) என்னவென்று விளக்காததாலும் கொள்ளையடிக்கப்பட்டது 'ஹவாலா பணம்' என்பதனை போலீஸார் உறுதி செய்தனர். அதற்கேற்றார் போல தர்மராஜனும் அது பாஜகவினரின் பணம்தான் என்று வாய் திறந்தது போலீஸாருக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து தர்மராஜனை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தேர்தல் பணிகளுக்காக பாஜக மாநில தலைவர் தனக்கு திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்ததாகவும், அங்கு இருந்துகொண்டு தேர்தலுக்கான பிரசுரங்கள் மற்றும் அச்சடிப்பு வேலைகளைப் தான் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் கூறினார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் திருச்சூரிலிருந்து ஆலப்புழா பாஜக பொருளாளர் கர்த்தா என்பவருக்குச் சென்று சேரவேண்டிய பணம் என்றும் தெரிவித்தார். தர்மராஜனின் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்கள் கேரள பாஜக மாநிலப் பொருளாளர் கணேசனுக்குத் தெரியும் என்பதால் போலீசாருக்கு கணேசன் மீது சந்தேகம் எழுந்தது. அவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். ஆனால், கணேசன் தான் தர்மராஜனிடம் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரசுரங்கள் தொடர்பாக மட்டுமே பேசியதாகவும், திருடுபோன பணத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினார். பாஜக நிர்வாகி கணேசன் அளித்த விளக்கம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் கணேசனைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஹவாலா பணம்
ஹவாலா பணம்
Representational image

கொள்ளை சம்பவத்தில் மாநில பாஜக புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டாலும், போலீசார் இதுவரையிலும் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தீபக் திருச்சூர் பாஜக அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்துள்ளது. ஆனால், திருச்சூர் பாஜக மாவட்டச் செயலாளர் அனீஸ் குமார் தீபக்கை யார் என்றே தெரியாது என்று மறுத்திருக்கிறார். பாஜகவைச் சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வழக்கிலிருந்து கேரள பாஜக தலைவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு ஓரம் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கேரள பாஜக நிர்வாகிகள் சிலரின் மொபைலில் 'கோடகாரா ஹவாலா பணம்' தொடர்பாக ஆடியோ பதிவுகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜகவின் ஹவாலா பணம் தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட போதிலும், கொள்ளையிலும் பாஜகவினருக்குத் தொடர்பு இருப்பது பாஜகவினரே அக்கட்சியின் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசாரை யூகிக்க வைக்கிறது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் சிலர் கூறுகையில், "வழக்கில் கையாளப்பட்டிருப்பது ஹவாலா பணம்தான் என்று நிரூபணமாகி இருக்கிறது. வழக்கில் பல்வேறு பாஜக நிர்வாகிகளுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. விரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றனர்.

கொள்ளை
கொள்ளை

ஆனால், யுவ மோர்ச்சா மற்றும் பாஜகவினர் சம்பவம் குறித்துக் கூறுகையில், "கொள்ளை சம்பவத்திற்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆளும் அரசாங்கம் பாஜகவைக் குறி வைத்துவிட்டது. அதற்கான நடவடிக்கைகள் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது" என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். சமீபமாகக் கேரள பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதது. தேர்தல் நேரத்தில் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நிலவிய கருத்துவேறுபாடு தான் இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்கின்றனர் பாஜக தொண்டர்கள். கேரளாவில் ஏற்கனவே மிகவும் பரிதாபகரமான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பாஜகவிற்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த 'ஹை-வே ஹவாலா' விவகாரம்.

அடுத்த கட்டுரைக்கு