Published:Updated:

கேரளாவை அதிரவைத்த வீடியோ; போலீஸ் லாக் செய்த காருக்குள் கதறிய 3 வயது குழந்தை! - நடந்தது என்ன?

குழந்தையின் தந்தை சிபு
குழந்தையின் தந்தை சிபு

காருக்குள் தனியாக இருந்த குழந்தை பலமாக அழுதது. குழந்தை அழுவது பற்றி சிபு கூறியும், அதைக் கண்டுகொள்ளாத போலீஸார் கார் சீஸ் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். இதையடுத்து குழந்தை காருக்குள் கத்தி அழுவதை தாய் அஞ்சனா வீடியோ எடுத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், ஆற்றிங்கல் பகுதியில் பெண் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் போலீஸ் காரின் அருகில் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (38) என்பவர், அவரின் எட்டு வயது மகளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது காரிலிருந்த தனது செல்போனைக் காணவில்லை என்று சிவில் போலீஸ் அதிகாரி ரெஜிதா கூறினார். மேலும், காரின் அருகில் நின்றுகொண்டிருந்த ஜெயச்சந்திரனிடம் இது குறித்து விசாரணை நடத்தினார்.

ஜெயச்சந்திரன் போன் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். அடுத்ததாக ஜெயச்சந்திரன் அழைத்து வந்திருந்த அவரின் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளிடம் விசாரணை நடத்தினார் ரெஜிதா. உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பேன் என ரெஜிதா மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பயந்துபோன சிறுமி சத்தமாக அழத் தொடங்கினார். இதற்கிடையில் சக போலீஸ் ஒருவர் ரெஜிதாவின் செல் நம்பருக்கு போன் செய்தார். அது காருக்குள் இருந்த ரெஜிதாவின் கைப்பையில் ரிங் ஆனது. இதையடுத்து தனது போன் திருடப்படவில்லை என்பது உறுதியானதால் விழிபிதுங்கினார் ரெஜிதா. இது குறித்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

காருக்குள் கதறிய குழந்தை
காருக்குள் கதறிய குழந்தை

பொது இடத்தில் தந்தையையும் குழந்தையையும் விசாரணை நடத்திய சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்தியது. குழந்தைக்கு கவுன்சலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிவில் போலீஸ் அதிகாரி ரெஜிதா, திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது முதற்கட்ட நடவடிக்கை எனவும், அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், திருவனந்தபுரம் அருகேயுள்ள பாலராமபுரத்தில், 3 வயது சிறுமியை காரில் அடைத்துவைத்ததாகவும், சிறுமி தேம்பித் தேம்பி அழுதபோதும் போலீஸார் கண்டுகொள்ளாமல் சாவியை எடுத்துக்கொண்டு போனதாகவும் புதிய புகார் ஒன்று கிளம்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், 23-ம் தேதி பாலராமபுரத்தில் சிபு தன் மனைவி, 3 வயது மகளுடன் காரில் சென்றிருக்கிறர். அப்போது அதிவேகமாகச் சென்றதாக சிபுவின் காரை போலீஸார் மடக்கினர்.

குழந்தையுடன் தாய் அஞ்சனா
குழந்தையுடன் தாய் அஞ்சனா

அதிவேகமாக வந்ததற்காக 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராதத் தொகையை செலுத்திய சிபு, ``நிறைய கார்கள் அதிவேகமாகச் செல்கின்றனவே... அதையெல்லாம் ஏன் மடக்கிப் பிடிக்கவில்லை?” எனக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் சிபுவின் காரை லாக் செய்து சாவியை எடுத்துள்ளனர். சிபுவும் அவரின் மனைவி அஞ்சனாவும் காருக்கு வெளியே நின்ற நிலையில் அப்போது சிபுவின் 3 வயது குழந்தை மட்டும் காருக்குள் இருந்தது. அந்தச் சமயத்தில் காருக்குள் தனியாக இருந்த குழந்தை பலமாக அழுதது. குழந்தை அழுவது பற்றி சிபு கூறியும், அதைக் கண்டுகொள்ளாத போலீஸார் கார் சீஸ் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். இதையடுத்து குழந்தை காருக்குள் கத்தி அழுவதை தாய் அஞ்சனா வீடியோ எடுத்தார்.

கேரளா:`` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’  முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், சிபு காவலர்களைத் தாக்கியதாக வழக்கு பதிய முயன்றனர். ஆனால் சாலையில் சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் பேசியதால், போலீஸார் அவர்களை விடுவித்துவிட்டுச் சென்றனர். குழந்தை அழும் வீடியோவை வெளியிட்ட சிபு கூறுகையில், ``நான் காவல்துறைக்கு பயந்து இதுவரை எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆற்றிங்கல் பகுதியில் பெண் சிவில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது மீடியாக்களில் வெளியானதால் தைரியமாக வீடியோவை வெளியிட்டேன்" என்றார். பாலராமபுரம் போலீஸ் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு