Published:Updated:

`தங்கக் கடத்தல்' ஸ்வப்னாவுடன் பேசத் தனி பிளாட்! - அதிர்ச்சி கொடுத்த 9 மணிநேர விசாரணை

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

`ஸ்வப்னா வழக்கில் சிலரைக் காப்பாற்ற நினைக்கும் முதலமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என்கின்றன கேரள எதிர்க்கட்சிகள்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 2 மணிவரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் ஒன்பது மணிநேரம் நடந்த இந்த விசாரணையில் தூதரக பார்சல் வழியாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித்துக்கும் சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஸ்வப்னா மற்றும் குழுவினர் சேர்ந்து ஆலோசனை நடத்துவதற்காக சிவசங்கரன் தனது பிளாட்டுக்கு அருகிலேயே ஒரு பிளாட் புக் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கேரள சி.பி.எம் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸும் பி.ஜே.பி-யும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. பி.ஜே.பி கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் கூறும்போது, "சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தைப் பிடித்ததும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்துதான் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு முதலில் போன் கால் சென்றுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளை எதற்காக அழைத்தார்கள் என்பதை அறிய முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனின் மொபைல் போன் மற்றும் அலுவலக தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சிவசங்கரன்
சிவசங்கரன்

இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக முதல்வரின் செயலாளராக இருந்தவரை 9 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளார்கள். முதல்வர் அலுவலகத்தில் இருந்து பிளாட் புக் செய்யும் அளவுக்கு சிவசங்கரன் செயல்பட்டுள்ளார். இவர்கள் சேர்ந்து அந்த பிளாட்டில் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். சிவசங்கரன்தான் ஸரித்திடம் அதிக முறை போனில் அழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு ஆதாரங்கள் போதாதா. இதில் சிலரை காப்பாற்ற நினைக்கும் முதலமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

`ஸ்வப்னா கடத்திய 27 கிலோ தங்கம் எங்கே?’ - சிவசங்கரனிடம் விசாரிக்கும் என்.ஐ.ஏ

அதுபோல தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித், எதற்காக அமைச்சர் ஜலீலின் பிரைவேட் செக்கரட்டரியை அழைத்தார் என்பதையும் ஆராய வேண்டும். பிரைவேட் செக்கரட்டரியின் மொபைல் எண்ணை அமைச்சர் ஜலீல் பயன்படுத்தவில்லை என்று எப்படிக் கருதமுடியும். அதுமட்டுமல்லாது ரம்ஜானுக்காக ஸ்வப்னாவை மே 27-ம் தேதி அழைத்ததாகச் சொன்னார். ஆனால், அதற்கு முன்பே அவர் ஸ்வப்னாவை அழைத்துள்ளது தெரியவந்துள்ளது" என்றார்.

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "முதல்வரின் நாக்காக நான்கு ஆண்டுகள் இருந்த சிவசங்கரன், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது தெளிவாகியுள்ளது. ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிறார். அதுபோல விசாரணைக்கு முன்பே அமைச்சர் ஜலீலுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். குற்றவாளிகளின் நிறுவனத்தைத் திறக்கச் சென்ற சபாநாயகருக்கு ஆதரவாகவும் முதல்வர் பேசுகிறார். மொத்தத்தில் மாநிலத்தை அவமானப்படுத்தியவர்களுக்கு குடை பிடிக்கிறார் பினராயி விஜயன்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு