திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் செட்டில்மென்டுகள் பல உள்ளன. அதில் விதுரா, பாலோடு பகுதிகளில் மலைவாழ் பழங்குடியின மக்களின் 192 குடியிருப்புகள் உள்ளன. இங்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் தற்கொலை அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சிறுமிகள் உள்பட ஐந்து பெண்கள் இங்கு தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தற்கொலைகள் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல முதன்மைச் செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த தற்கொலை வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் மலைவாழ் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்வதாகத் தெரியவந்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த மலை கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர் விவசாய கூலி வேலைக்காகப் பகலில் வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுமிகளும், பெண்களும் வீட்டில் தனியாக இருந்து ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வது வழக்கம். இந்த சமயத்தில்தான் கஞ்சா நபர்கள் இளம் பெண்களிடம் தவறாக நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த தற்கொலை தொடர்பான புகாரில் இதுவரை குற்றவாளி யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட ஐந்து பேரும் ப்ளஸ் ஒன் முதல் கல்லூரி வரை படித்து வந்த பெண்கள். இவர்கள் மிகவும் நன்றாகப் படித்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்தத் தற்கொலை சம்பவங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் இந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதையடுத்து திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா கோபிநாத் இன்று இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இடிஞாறு பகுதியில் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

எஸ்.பி ஆய்வு செய்தபோது மதுவிலக்கு பிரிவு மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். வீட்டில் தனியாக இருக்கும் மாணவிகளுக்காக ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்துவது, கவுன்சலிங் போன்றவற்றின் மூலம் உதவ வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் போதை விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.