சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவர் 59-வது திமுக வட்டச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். கோடைக்காலம் என்பதால் அரசியல்கட்சியினர் மற்றும் சேவை மனப்பான்மை உடையவர்கள் மக்கள் தாகத்தைத் தீர்க்க, ஆங்காங்கே நீர், மோர்ப் பந்தல்களை அமைத்து அவற்றைப் பராமரித்துவருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பிராட்வே பகுதியில் தி.மு.க சார்பாகத் தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டது. அதை சௌந்தரராஜன் பராமரித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சௌந்தரராஜன் தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு அவரைச் சுற்றிவளைத்த மர்மக் கும்பல், அவரை அரிவாள்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சௌந்தரராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சௌந்தரராஜன், தி.மு.க-வில் இணைவதற்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீஸார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தி.மு.க பிரமுகர் சௌந்தரராஜன் கொலை வழக்கில் கார்த்திக் குமரேசன், சதீஷ், இன்பா, அ.தி.மு.க பிரமுகர் கணேசன், அவர் மகன் தினேஷ் ஆகிய ஐந்து பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.
