Published:Updated:

ஸ்டேஷன் வளாகத்தில் பைக் திருடிய பெண் காவலர்! - கூடங்குளம் அதிர்ச்சி

பெண் காவலர் கைது
பெண் காவலர் கைது ( representational image )

காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக் திடீரென காணாமல்போனது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்டேஷனில் பணியாற்றிய பெண் காவலர் திருடியது தெரியவந்தது. அவர் கைதுசெய்யப்பட்டார்.

கைது குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபடும்போது அதில் சம்பந்தப்பட்ட வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்வது வழக்கம். அப்படி பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் ஸ்டேஷன் வளாகத்தில் அவை நிறுத்திவைக்கப்படும்.

மதுரை: 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - போக்சோ சட்டத்தில் காவலர் கைது

ஸ்டேஷனில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் எடுத்துக்கொள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. வாகனங்களிலிருக்கும் புதிய டயர்கள், ஸ்பீக்கர்கள், பேட்டரி உள்ளிட்டவை எடுக்கப்படுவதாக புகார் உள்ள நிலையில், ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரே பைக் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக பெண் போலீஸ் கிரேசியா என்பவர் பிடிபட்டிருக்கிறார். திருட்டுப்போன பைக்கின் உரிமையாளரான மதன்ராஜ் என்பவர் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனிடம் புகார் மனு அளித்திருந்தார்.

பைக்
பைக்
representational image

அதில், ``தீபாவளி தினத்தன்று நானும் எனது உறவினரும் மது விற்பனை செய்யப்பட்ட இடத்தின் அருகே நின்றபோது, கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் எங்களிடமிருந்து இரு பைக் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தார்கள்.

என் உறவினரின் பைக் மற்றும் செல்போன் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையில், என்னுடைய செல்போன், பைக் ஒப்படைக்கப்படவில்லை. தொடர்ந்து பல முறை கேட்டும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி அணைக்கப்பட்டு திருட்டு நடந்திருந்ததால், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
காவல்துறையினர்.

இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில், அந்த ஸ்டேஷனிலிருந்த சிசிடிவி-யை அணைத்துவைத்துவிட்டு திருட்டு நடந்திருந்ததால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அன்று பணியிலிருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், பெண் காவலரான கிரேசியா என்பவர் சிக்கினார்.

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம்நிலைப் பெண் காவலரான கிரேசியா, தான் பணியில் இருக்கும்போது ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைத் தன் கணவர் அன்புமணியின் உதவியுடன் திருடிச் சென்றது தெரியவந்தது. அவரிடமிருந்து மூன்று பைக்குகள், ஒரு செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட அன்புமணி
கைது செய்யப்பட்ட அன்புமணி

இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் காவலர் கிரேசியா, அவருடைய கணவர் அன்புமணி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பெண் காவலர் ஒருவர் துணிச்சலாக காவல் நிலையத்திலிருந்தே வாகனங்களைக் கடத்தி விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு