Election bannerElection banner
Published:Updated:

`போலீஸ் ஸ்டேஷனில் பைக்குகளைத் திருடியது ஏன்?’ - கூடங்குளம் பெண் காவலர் வாக்குமூலம்

கைதான பெண் காவலர் கிரேசியா
கைதான பெண் காவலர் கிரேசியா

காதல் கணவருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளைத் திருடி விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண் போலீஸ் கிரேசியா, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பைக்குகள் திருட்டுப்போவது வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக, விலையுயர்ந்த பைக்குகள், செல்போன்கள் போன்றவை காணாமல் போயிருக்கின்றன.

`இனி எனக்கு மட்டும் பணம் கொடுங்கள்!' - கைதிக்கு சலுகை அளிக்கப் பேரம் பேசிய நெல்லை சிறைக் காவலர்

கடந்த மாதத்தில் குற்றச் சம்பவம் தொடர்பாக மதன்ராஜ் என்பவரது பைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிய பின்னரும் பைக்கை ஒப்படைக்காமல் இழுத்தடித்திருக்கிறார்கள். அதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனிடம் புகார் செய்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கூடங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் கிரேசியா என்பவர், தன் கணவர் அன்புமணியுடன் சேர்ந்து பைக்குகளைத் திருடிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைதான காவலர் கிரேசியாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.

பெண் காவலரின் கணவர் அன்புமணி
பெண் காவலரின் கணவர் அன்புமணி

பிடிபட்ட இருவரும் இதுவரை 10-க்கும் அதிகமான பைக்குகளைத் திருடி விற்பனை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து, காவல் நிலையத்தில் திருடிச் செல்லப்பட்ட மூன்று பைக்குகள், ஒரு செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான காவலர் கிரேசியா, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு காவலராகத் தேர்வாகி சென்னையில் பயிற்சி பெற்றார். அங்கு ஆயுதப்படையில் பணியாற்றியபோது, அருகிலுள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்த நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூரைச் சேர்ந்த அன்புமணியுடன் காதல் மலர்ந்துள்ளது.

பெண் காவலர் கிரேசியா
பெண் காவலர் கிரேசியா

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2012-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறாது. சென்னையிலிருந்து 2018-ம் ஆண்டு நெல்லை ஆயுதப் படைக்கு பெண் போலீஸ் கிரேசியா மாற்றலாகிவந்தார்.

அதன் பின்னர் 2019-ம் ஆண்டு கூடங்குளம் காவல் நிலையத்துக்கு கிரேசியா மாற்றப்பட்டார். அங்கு அவர் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். அவருடைய கணவர் கடையம் பகுதியிலுள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்துவருகிறார்.

கணவருடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்ட கிரேசியா காவல் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்.
விசாரணை அதிகாரிகள்

வாரத்தில் மூன்று நாள் இரவு பாரா டூட்டியில் இருக்கும் கிரேசியா, காவல் நிலையத்தில் பைக்குகள் பிடிபட்டு நிறுத்தப்பட்டிருந்தால், கணவரை வரவழைத்துத் திருடி விற்பனை செய்வதற்கு ஒத்துழைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருவரும் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, காவல் நிலையத்திலிருந்து பைக்குகள், செல்போன் போன்றவற்றை பெண் போலீஸ் கிரேசியா திருடிச் சென்றதை சக காவலர்கள் அறிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதனால் அவருக்கு உதவி செய்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

பைக்குகள்
பைக்குகள்
representational image

இது தொடர்பாக கூடங்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.எஸ்.ரவி, காவல்துறை தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியிருக்கும் கோரிக்கை மனுவில், `பெண் காவலர் கைதான விவகாரத்தின் பின்னணியில் காவல்துறையினர் இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு