Published:Updated:

பஞ்சாயத்து, பல கட்டுப்பாடுகள், தீண்டாமை... கிருஷ்ணகிரி, தருமபுரி வன்கொடுமை மாவட்டங்களா? - ஓர் அலசல்

தீண்டாமை கொடூரம்
News
தீண்டாமை கொடூரம்

``அரசு சிறப்பு கவனம் செலுத்தி, சட்ட விரோத பஞ்சாயத்து நடத்துவோரையும், வன்கொடுமையில் ஈடுபடுவோரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.’’ - எவிடென்ஸ் கதிர்.

பஞ்சாயத்து, பல கட்டுப்பாடுகள், தீண்டாமை... கிருஷ்ணகிரி, தருமபுரி வன்கொடுமை மாவட்டங்களா? - ஓர் அலசல்

``அரசு சிறப்பு கவனம் செலுத்தி, சட்ட விரோத பஞ்சாயத்து நடத்துவோரையும், வன்கொடுமையில் ஈடுபடுவோரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.’’ - எவிடென்ஸ் கதிர்.

Published:Updated:
தீண்டாமை கொடூரம்
News
தீண்டாமை கொடூரம்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மொத்தம், 962-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக, 72.41 சதவிகிதம் கல்வியறிவும், தருமபுரியில், 68.54 கல்வியறிவும் இருக்கிறது.

ஆனால், என்னதான் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் மனிதகுலம் முன்னேற்றமடைந்தாலும், இன்னமும் இந்த இரண்டு மாவட்ட கிராமங்களில், பிற்போக்குத்தனமான பல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படுவது வேதனையான விஷயம்.

சாதிப்பாகுபாடு
சாதிப்பாகுபாடு

கடந்த வாரம்கூட கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தில், மணியக்காரர் (ஊர் தலைவர்) என அழைக்கப்படும், திமுக ஒன்றியச் செயலாளர் ‘லோக்கல் பஞ்சாயத்து’ கூட்டி, அந்தப் பகுதியில் காதல் திருமணம் செய்த ஜோடிக்கு, 25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தொகரப்பள்ளி அரசுப் பள்ளியில், மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில், MBC, SC, ST என, சாதியப்பாகுபாட்டுடன் எழுதப்பட்டிருந்தது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுபோல பல, சாதிய வன்கொடுமை, பஞ்சாயத்து, கட்டுப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இது அரசுகளின் அலட்சியம்!

தீண்டாமையைத் தடுக்கவும், கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்ட விரோத பஞ்சாயத்தைக் களையவும், பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மாவட்டம்தோறும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடத்த வேண்டுமென்பது சட்டம். இதேபோல், மாநில அளவில் முதல்வர் தலைமையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும்.

தொகரப்பள்ளியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
தொகரப்பள்ளியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

ஆனால், கடந்த 27 ஆண்டுகளில், ஆறு மாநிலக் கூட்டங்களும், பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தவே இல்லையென்பதும்தான் உண்மை நிலவரம். தற்போதைய திமுக-வும் சரி, முந்தைய அதிமுக-வும் சரி, இரண்டு கட்சிகளுமே தங்கள் ஆட்சியில், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக இருந்தன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்கணும்!’

இது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் போனில் பேசினோம், ‘‘கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஓராண்டில் மட்டும் கிருஷ்ணகிரி தளி தொகுதியில் மட்டுமே, ஒன்பது பேர் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் பல பிற்போக்குத்தமான கட்டுப்பாடுகள் உள்ளன.

வன்னி அரசு.
வன்னி அரசு.

சட்டப்படி மாதம்தோறும் நடத்தவேண்டிய, விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டங்களை அரசு முறையாக நடத்தாமல் இருப்பதால், வன்கொடுமை வழக்குகள் தேங்கி பலருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. கூட்டம் நடத்தினால்தானே, கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத பஞ்சாயத்து, வன்கொடுமைகளைக் களைய முடியும். அரசு அலட்சியம் காட்டாமல் இந்தக் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வன்கொடுமைகள் அரங்கேறுவதைத் தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும்,’’ என்றார்.

சாதிப் பிரிவுகள் எழுதப்பட்டுள்ளன.
சாதிப் பிரிவுகள் எழுதப்பட்டுள்ளன.
Special Arrangement.

உடனடியாகக் கைது செய்யணும்!

இது குறித்து எவிடென்ஸ் கதிரிடம் போனில் பேசினோம், ‘‘விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடத்த வேண்டுமென்பது, SC, ST சட்டத்தில் உள்ளது, இது, 1995-ல் அமல்படுத்தப்பட்டது. 1995 முதல் இதுவரை, 54 மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 6 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. எங்கும் இந்தக் கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை.

கிராமங்களில் வன்கொடுமை, தீண்டாமை இருக்கின்றனவா என்று கண்காணிக்க, ஊராட்சியில் சமூகநீதி எனத் தனியாக நிதியே வழங்கப்படுகிறது. ஆனால், நிதியை எப்படிப் பயன்படுத்துவதென, ஊராட்சியினருக்கு முறையாக பயிற்சிகூட வழங்கப்படவில்லை. இன்னமும் கிராமங்களில் இரட்டைக்குவளை முறை, பல கட்டுப்பாடுகள், தீண்டாமை நிலவுகின்றன. அரசு சிறப்பு கவனம் செலுத்தி, சட்ட விரோதப் பஞ்சாயத்து நடத்துவோரையும், வன்கொடுமையில் ஈடுபடுவோரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவித்தால், அங்கு வன்கொடுமைகளைக் களைய அதிகப்படியான நிதி கிடக்கும். விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி தீர்வு காண முடியும்’’ என்றார்.

எவிடென்ஸ் கதிர்.
எவிடென்ஸ் கதிர்.

‘கூட்டம் நடத்துவதில் குறைபாடு இருக்கு!’

இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்திடம் போனில் பேசினோம். ‘‘தொகரப்பள்ளியில் காதல் திருமணம் செய்தவர்களுக்கு, அபராதம் விதித்த சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை கேட்டிருக்கிறோம். விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம், மாநில அளவில் தற்போது முறையாக நடத்தப்படுகிறது, மாவட்ட அளவிலும் முறையாக நடத்தப்படுகிறதா எனக் கண்காணித்துவருகிறோம். சப் டிவிஷன் அளவில் ஆர்டிஓ தலைமையிலான இந்தக் கூட்டங்கள் நடத்துவதில் சில குறைபாடுகள் உள்ளன. இவற்றைச் சரிசெய்ய முறையாகக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், வன்கொடுமை தொடர்பான வழக்குகள் முதலில், டி.எஸ்.பி., ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகளுக்குத்தான் விசாரணைக்கு வரும். இதனால், மாநில அளவில், டிஎஸ்பி, ஆர்டிஓ–க்களுக்கு, 900 பேருக்கு விரைவில் பயிற்சியளிக்கப்போகிறோம்’’ என்றார்.

‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்; அனைவரும் சமம்’ இது போன்ற வாசகங்களைப் புத்தகங்களில் மட்டுமே காண முடியுமா... இந்தப் பிரச்னைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காணவேண்டியது அவசியம்!