Published:Updated:

`இந்தாண்டில் மட்டும் 4,200 போன்கால்கள்!’- சின்மயானந்த் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவி கைது

சட்டவிரோதமாக பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் சட்டக் கல்லூரி மாணவி.

Law College Student
Law College Student ( File Photo )

முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி சின்மயான்ந்த் ஆசிரமம் நடத்தும் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.

Chinmayanand
Chinmayanand

இதன் பின்னர் சுவாமி சின்மயான்ந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே குறிப்பிட்ட அந்த மாணவி தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தான் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்றும் சின்மயான்ந்த்தை சிக்க வைத்தது எப்படி என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் இன்று புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவி, அதே சிறப்பு விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது கைதுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் கல்லூரி மாணவி. ஆனால், இது தொடர்பான விசாரணை புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Chinmayanand
Chinmayanand

இதைத் தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டக் கல்லூரி மாணவி கைதுசெய்யப்பட்டது தொடர்பாகப் பேசிய சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் நவீன் அரோராம் ``இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரான சஞ்சய் சிங் என்பவருடன் இந்த ஒரு ஆண்டில் மட்டும் சட்டக்கல்லூரி மாணவி 4,200 முறை தொலைபேசியில் பேசியுள்ளார். இதன் அடிப்படையில்தான் அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்” என்றார். சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞர் சட்டக் கல்லூரி மாணவிக்கு எதிராக இந்தப் புகாரை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.