Published:Updated:

"ஒரு வருடத்தில் லாக்அப் டெத் 10; 24 வருடத்தில் என்கவுண்டர் டெத் 114!" - மதுரை மக்கள் கண்காணிப்பகம்

லாக்அப் மரணங்கள்

ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

"ஒரு வருடத்தில் லாக்அப் டெத் 10; 24 வருடத்தில் என்கவுண்டர் டெத் 114!" - மதுரை மக்கள் கண்காணிப்பகம்

ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

Published:Updated:
லாக்அப் மரணங்கள்
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெரினா பீச்சில் குதிரை ஓட்டும் தொழிலாளியாகப் பணியாற்றும் விக்னேஷ் வீடில்லாத விளிம்பு நிலை இளைஞர். இவரின் சகோதரர்களும் கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டு ஏழ்மைநிலையில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இரவு சென்னைப் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலைச் சந்திப்பில் சோதனை செய்த போலீஸ், ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷை விசாரணைக்காக அழைத்துச் சென்றதில் விக்னேஷ் மரணமடைந்தார்.

விக்னேஷ்
விக்னேஷ்

இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கத் திட்டமிட்ட சம்பந்தப்பட்ட காவல்துறையினர், கஷ்ட நிலையில் வாழும் விக்னேஷின் சகோதரர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் அதைச் சாதிக்க நினைத்த நிலையில் ஊடகங்களாலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் உண்மை வெளியே தெரிந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், சுதா ராமலிங்கம், ப.பா.மோகன், அஜிதா, மில்டன் ஆகியோர் சட்ட உதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாத்து ஊடகங்களில் பேச வைத்ததன் விளைவாக தற்போது சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கும் ஜி-5 காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இந்த வழக்கில் விசாரணை நடத்தியது. இது குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி டிபேன்,

"சாத்தான்குளம் வழக்கு போல இதிலும் மருத்துவர்கள், சிறைத்துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் சட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. விக்னேஷ் மரணமடைந்த நிலையில் சித்திரவதைக்குள்ளான சுரேஷுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. விக்னேஷ் மரணமடைந்த பிறகு சகோதரர் விஜய்யின் வீட்டை காலி செய்ய வைத்தும், இன்னொரு சகோதரர் வினோத்தை குளித்துக் கொண்டிருக்கும்போதே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றும் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சட்டத்தை மீறியுள்ளார்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

பிரச்னை இல்லாமல் விக்னேஷின் உடலை அடக்கம் செய்வதற்காக ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் வினோத்திடம் ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார். பெற்றோர் இல்லாமல், வீடில்லாமல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை இல்லாமல் விளிம்பு நிலையில் வாழ்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தலைநகரமான சென்னையில் இந்தக் கொடுமைகள் நடந்துள்ளன. ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இவ்விஷயத்திற்காகக் குரல் எழுப்பியபின் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி-யிடம் வழக்கை ஒப்படைத்து, தற்போது விரைவாக நடவடிக்கை எடுத்துவருகிறது.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் காவல் நிலையச் சம்பவத்துக்குப் பின்னும் லாக்கப் மரணங்களும், காவல்துறையின் அத்துமீறல் என்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன" என்றார்.

கடந்த டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கல்லூரி மாணவர் மணிகண்டன் டூவீலரில் சென்றபோது போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காகக் கீழத்தூவல் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டதும், அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவமும் தமிழகத்தை அதிர வைத்தது. பல்வேறு கட்சிகள் நீதி கேட்டுப் போராட்டம் நடத்தின. ஆனால், மணிகண்டன் விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டதாக வந்த மருத்துவ அறிக்கை அடிப்படையில் அந்த வழக்கு முடிந்துபோனது. ஆனால், அவர் விஷமருந்த என்ன காரணம் என்பதை விசாரிக்காமலே விட்டுவிட்டார்கள்.

ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்
அதில் கடந்த 07-01-2021-ல் சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் சூர்யா, 03-4-21-ல் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் ராஜாமணி, 07-07-21 கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்திர பிரசாத், 24-08-21-ல் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவாணன், 04-09-21-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன், 12-12-21-ல் இராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் மணிகண்டன், 13-01-22 நாமக்கல் கிளைச்சிறையில் பிரபாகரன், 05-02-22 திருநெல்வேலி ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சுலைமான், 14-02-22 திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் தடிவீரன், 18-04-22 சென்னை தலைமைச்செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் என 10 காவல் நிலைய மரணங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் 1998 மே முதல் 2022 மே 13 வரை தமிழகத்தில் நடந்த 92 போலீஸ் என்கவுன்டர்களில் 114 பேர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களில் விசாரணைக் காவல், நீதிமன்றக்காவல் மரணங்களில் இந்தியாவில் உ.பி முதலிடத்தில் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

`ஜெய் பீம்' படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு மிசா காலத்தில் தான் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பதிவு செய்த முதலமைச்சர், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவிகள் காவல்துறையினரால் பாதிக்கப்படாத வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவும் வேண்டும் என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.