Published:Updated:

சிலைக்கடத்தல் வழக்கு: அறநிலையத் துறை அதிகாரியின் ஜாமீன் ரத்துக்கு இடைக்காலத் தடை!

கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை அதிகாரி திருமகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றம்.

கபாலீஸ்வரர் கோயில்
கபாலீஸ்வரர் கோயில்

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, அக்கோயிலில் உள்ள புன்னைவன நாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டதாக, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குப் புகார் சென்றது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல், இந்த வழக்கை விசாரித்தார்.

அறநிலையத் துறை ஆணையர் அலுவலகம்
அறநிலையத் துறை ஆணையர் அலுவலகம்

கோயிலின் தற்போதைய செயல் அலுவலர், பணியாளர்கள், அர்ச்சகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, அர்ச்சகர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் கைதுசெய்யப்பட்டார். சிலை மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட காலகட்டத்தில், கபாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக இருந்தது திருமகள்தான்.

கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருமகளுக்கு, நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், திருமகள். இந்த வழக்கு, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

Madras High Court
Madras High Court

அப்போது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், திருமகள் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும் என்றும், அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமகள் ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கும்பகோணம் நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார், திருமகள். "சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில், கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றி வந்துள்ளேன்.

பொன். மாணிக்கவேல்
பொன். மாணிக்கவேல்

இந்நிலையில் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்தில் எனது ஜாமீனை ரத்து செய்யக்கோரி விசாரணை அதிகாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சாட்சியங்களைக் கலைத்தல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லுதல், அதே குற்றத்தில் மீண்டும் ஈடுபடுதல் போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்யக் கோர முடியும். எனவே, எனது ஜாமீனை ரத்துசெய்தது சட்டவிரோதம்.

ஜாமீன் ரத்து உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும்'' எனக் கூடுதல் ஆணையர் திருமகள் சார்பாக வாதிடப்பட்டது. "மனுதாரரின் ஜாமீனை ரத்துசெய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரி பதிலளிக்க வேண்டும்'' என நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

கூடுதல் ஆணையர் திருமகள்
கூடுதல் ஆணையர் திருமகள்

அதேபோல், இந்த வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர் நீதிமன்றத்திலும் திருமகள் மனுத்தாக்கல் செய்திருந்தார். கபாலீஸ்வரர் கோயில் சிலை வழக்கில், அறநிலையத் துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ’அவருக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது' என திருமகள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், திருமகள் மீதான வழக்கு விசாரணையைத் தொடரலாம் எனவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது எனவும் தடைவிதித்தும் உத்தரவிட்டார்.

புன்னைவன நாதர் சந்நிதி
புன்னைவன நாதர் சந்நிதி

மேலும், திருமகள் தாக்கல் செய்த மனுவை, முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து, அக்டோபர் 31-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இந்நிலையில்தான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருமகளின் ஜாமீன் மனுவை ரத்துசெய்ததற்கு, இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதேபோல், 2018 ஜூலை 30-ம் தேதி அறநிலையத் துறையின் திருப்பணியின் கூடுதல் ஆணையராக இருந்த கவிதா, காஞ்சிபுரம் சிலை வழக்கில், முதல் தகவல் அறிக்கைகூடப் போடப்படாமல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டதால், பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கபாலீஸ்வரர் கோயில்
கபாலீஸ்வரர் கோயில்

ஒருவருடம் கடந்துள்ள நிலையில், கூடுதல் ஆணையர் கவிதா மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு எந்தவித ஆதாரங்களையும் போலீஸ் தரப்பு சமர்ப்பிக்காததால், கவிதா மீண்டும் பணியில் சேர்வதற்கான ஆணையை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.