Published:Updated:

`35-க்கும் மேல் வழக்குகள்; மாடர்ன் கெட்டப்பில் சொகுசு வாழ்க்கை!’ - யார் இந்த வசூர் ராஜா?

லோகேஸ்வரன்.கோ

வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா கூட்டாளிகளுடன் சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்திச் சிக்கியிருக்கிறார். இரு மாநில போலீஸாருக்குத் தண்ணிகாட்டிய வசூர் ராஜா மீது 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

ரவுடி வசூர் ராஜா
ரவுடி வசூர் ராஜா

மதுரையை நோக்கி நேற்று மதியம் சொகுசு காரில் வந்த ரவுடி கும்பல், கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிக்க முயன்றது. இந்தப் பரபரப்புச் சம்பவம் தொடர்பாக, வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான வசூர் ராஜா உட்பட 6 ரவுடிகளை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து கைதுசெய்தனர். 

காரில் வந்த ரவுடிக் கும்பல்
காரில் வந்த ரவுடிக் கும்பல்

ரவுடிகள் பயணம் செய்த சொகுசு காருக்கு, எம்.எல்.ஏ ஒருவரின் பெயரில் ‘பாஸ்’ பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிடிபட்டவர்கள் மீது பல்வேறு கொடூர குற்ற வழக்குகள் உள்ளன. போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டதாகக் கூறப்படும் இந்த ரவுடிகள் ‘மாடர்ன்’ கெட்டப்பில் சொகுசு காரில் ஜாலியாக ஊர் சுற்றியிருக்கிறார்கள்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் இதுபோன்ற கொடூரக் குற்றவாளிகளுக்கு காவல்துறையைச் சார்ந்த சில உயரதிகாரிகளே உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் செல்வாக்கும் இருப்பதால் ரவுடிகள் கைத்துப்பாக்கியுடன் தைரியமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்கக் குற்றங்களைத் துணிந்து செய்கிறார்கள்.

கைத்துப்பாக்கி
கைத்துப்பாக்கி

மதுரையில் பிடிபட்ட வேலூரைச் சேர்ந்த ரவுடி வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உட்பட 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரையில் வசூர் ராஜா மீது 7 முறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளுடன் வசூர் ராஜாவுக்குத் தொடர்பிருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள்.

தவிர, பெங்களூருவிலும் தேடப்படும் குற்றவாளியாகக் கர்நாடக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொடூர குற்றங்களைச் செய்யும் வசூர் ராஜா தன் கூட்டாளிகளுடன் பெங்களூருவில் பதுங்குவது வழக்கம். அங்கும் குற்றச் சம்பங்களில் ஈடுபட்டதால் கர்நாடக போலீஸார் வசூர் ராஜாவைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

ரவுடி வசூர் ராஜா
ரவுடி வசூர் ராஜா

வேலூர் மாவட்டக் காவல்துறையினரின் ரவுடிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதே, வசூர் ராஜாதான். என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கும் இவர், சில போலீஸாரின் உதவியுடன் தலைமறைவாக இருந்துவந்தார். இரு மாநிலக் காவல்துறையினருக்குத் தண்ணி காட்டிவந்த வசூர் ராஜா கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுரையை மிரள வைத்திருப்பது, பொதுமக்களை அச்சமடையச் செய்திருக்கிறது. தற்போது, கால் உடைக்கப்பட்ட நிலையில் மதுரையில் அரசு மருத்துவமனையில் வசூர் ராஜா சிகிச்சை பெற்று வருகிறார்.