`சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம்’ என்று 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பெண்ணியச் செயற்பாட்டாளர்களான பிந்து அம்மினி, கனக துர்க்கா ஆகிய இரண்டு பெண்கள் 2019, ஜனவரியில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டு சமூகச் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் சபரிமலை செல்வதற்காகப் பாதுகாப்பு கேட்டு கொச்சி கமிஷனர் அலுவலகம் சென்றிருந்தார். அப்போது அவருடன் சென்ற பிந்து அம்மினி மீது ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்துத் தாக்குதல் நடத்தினார். சபரிமலைக்குச் சென்று வந்த பிறகு வழக்கறிஞரான பிந்து அம்மினி மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த பிந்து அம்மினிமீது கடந்த மாதம் திடீரென ஆட்டோ ஒன்று மோதியது. இதனால் காயமடைந்த பிந்து சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். தன்மீது வேண்டுமென்றே ஆட்டோவை மோதியதாக அப்போது தெரிவித்திருந்தார் பிந்து. இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் பிந்து அம்மினி. அதில் வெள்ளை வேட்டியும், கறுப்புச் சட்டையும் அணிந்த ஒருவர் பிந்து அம்மினியைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஒரு வழக்கு சம்பந்தமாகத் தனது கட்சிக்காரருடன் சென்ற சமயத்தில், கோழிக்கோடு வடக்கு கடற்கரைப் பகுதியில், மதுபோதையில் வந்த ஒருவர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக பிந்து அம்மினி தெரிவித்திருக்கிறார். இது பற்றி பிந்து கொடுத்த புகாரின் அடிப்படையில், வெள்ளயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணியத்தை அவமானப்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.