Published:Updated:

கடலூர்: `ஊழியர் மர்ம மரணம்?!’ - திமுக எம்.பி நடத்தும் முந்திரி ஆலைமீது உறவினர்கள் புகார்

திமுக எம்.பி-க்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் முந்திரி திருடிய குற்றச்சாட்டில் ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கடலூர் மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தின் திமுக எம்.பி., டி.ஆர்.வி.ரமேஷ். பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி தொழிலதிபரான இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பண்ருட்டியை அடுத்திருக்கும் பனிக்கன்குப்பம் வடக்குத் தெருவில் இவருக்குச் சொந்தமான `ஸ்ரீகாயத்ரி கேஷுவ்ஸ்’ என்ற முந்திரி பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதில் மேல்பாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வேலை பார்த்துவந்தார்.

தி.மு.க எம். பி டி.ஆர்.வி.ரமேஷ்
தி.மு.க எம். பி டி.ஆர்.வி.ரமேஷ்

வழக்கம்போல நேற்று மாலை 6 மணிக்கு வேலையை முடித்துவிட்டு கம்பெனியைவிட்டு வெளியேறும்போது அவரை மேனேஜர் கந்தவேலுவும், காவலாளி சண்முகமும் சோதனையிட்டிருக்கிறார்கள். அப்போது கோவிந்தராஜ் ஏழு கிலோ அளவுள்ள முந்திரிப் பருப்பை மறைத்துவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இருவரும் சேர்ந்து கோவிந்தராஜைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜுக்கு மூக்கில் ரத்தம் வழிந்திருக்கிறது.

அதையடுத்து இரவு சுமார் 10 மணிக்கு கந்தவேலுவும், சண்முகமும் போலீஸில் புகாரளிப்பதற்காக கோவிந்தராஜை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு கோவிந்தராஜுக்கு ரத்தக் காயங்கள் இருந்ததைப் பார்த்த போலீஸார் புகாரை வாங்க மறுத்ததுடன், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் முந்திரித் தொழிற்சாலைக்கே அழைத்துச் சென்றிருக்கின்றனர் என்கிறார்கள் உறவினர்கள். அதன் பிறகு அங்கேயே மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் கோவிந்தராஜ்.

தி.மு.க எம்.பி மீது  கொலை மிரட்டல் வழக்கு!

அவர் விஷம் சாப்பிட்டதால்தான் உயிரிழந்திருக்கிறார் என்றும், அதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம் அவரைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள் என்று குற்றம்சுமத்துகின்றனர் கோவிந்தராஜின் உறவினர்கள். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷைத் தொடர்புகொண்டபோது, ``போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். அப்புறம் பேசுங்கள்” என்று கூறித் தொடர்பைத் துண்டித்தார். அவர் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் தரும் பட்சத்தில், அதை உரிய பரிசீலனைக்குப் பிறகு பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு