அன்று சரிதா நாயர்; இன்று ஸ்வப்னா சுரேஷ்! - இரண்டு வழக்குக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

காங்கிரஸ் ஆட்சியின்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடிக்குக் கொஞ்சம் குறையாதது தற்போது நடந்து வரும் தங்கக் கடத்தல் வழக்கு.
2013-ம் ஆண்டு, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சோலார் பேனல் வழக்கு பூதாகரமாக வெடித்தது. அப்போதைய முதல்வரான உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் தங்கம் கடத்தல் வழக்கு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் நடந்த சோலார் பேனல் வழக்கு மற்றும் தற்போதைய முதல்வரான பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக ஆட்சியின் தங்கக் கடத்தல் மோசடி ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.
சோலார் பேனல் வழக்கும் சரிதா நாயரும்!
சோலார் பேனல் வழக்கைப் பொறுத்தவரை, அப்போதைய முதல்வரான உம்மன் சாண்டி பெயரைப் பயன்படுத்தி மோசடி அரங்கேறியது. அரசு அலுவலகங்களிலும் வீடுகளிலும் சோலார் பேனல் அமைத்துக் கொடுக்கும் அனுமதி பெற்ற சோலார் பேனல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி நடந்தது.

அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய அந்த மோசடியின் பின்னணியில் சரிதா நாயர் இருந்தார். முக்கியக் குற்றவாளியான சரிதா நாயர் மீதான வழக்கு சூடுபிடித்த நிலையில், முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்கள் பலர் தன்னை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பினார்.
சோலார் பேனல் வழக்கு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் தனிச் செயலாளராக இருந்த டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம் ராஜ், தனி அதிகாரி ஜிக்கு மோன் ஆகியோர் உடனடியாகப் பொறுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயர் என்ற பெண் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். முதல்வர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தியே சரிதா நாயர் இந்த மோசடியைச் செய்திருந்தார். அதனால் உம்மன் சாண்டி, முதல்வர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று போராட்டங்கள் வலுத்தன. எதிர்க்கட்சிகள் நீதி விசாரணையை வலியுறுத்தின.
தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ்!
சோலார் பேனல் வழக்கைப் போலவே ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு, தங்கம் கடத்தல் வழக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. யு.ஏ.இ தூதரகத்துக்கு வந்த பார்சல் வழியாகத் தங்கம் கடத்தல் நடந்திருப்பதை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தங்கம் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.டி துறையின்கீழ் உள்ள நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராகவும் ஐ.டி துறையின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த சிவசங்கரன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன் நீண்ட விடுப்பில் செல்லவும் பணிக்கப்பட்டார். தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.

சர்வதேச தீவிரவாதக் கும்பலுக்கு இந்தக் கடத்தலில் தொடர்பு இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் அலுவலகத்தை ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிவசங்கரன் ஆகியோர் தவறாகப் பயன்படுத்தியதாக புகார் உள்ளது. அதனால் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.