Published:Updated:

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை: `வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றுங்கள்’ - வைகோ கோரிக்கை

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை - வைகோ கோரிக்கை
News
சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை - வைகோ கோரிக்கை

செங்கல்பட்டிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 17 வயது சிறுவன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்று அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை: `வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றுங்கள்’ - வைகோ கோரிக்கை

செங்கல்பட்டிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 17 வயது சிறுவன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்று அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:
சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை - வைகோ கோரிக்கை
News
சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை - வைகோ கோரிக்கை

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 17 வயது சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடுப் பகுதியில் வசித்துவரும் கணவனை இழந்த கைம்பெண் பிரியா. இவருக்கு ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். உறவுகள் இல்லாத ஆதரவற்ற நிலையில் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ (17) பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

வைகோ
வைகோ

சொந்த வீடு இல்லாததால், குடிநீர் ஏற்றும் லாரிகளைப் பார்த்துக்கொள்ளும் வாட்ச்மேன் பணி செய்துகொண்டு அங்கேயே வசித்துவருகிறார். கணவர் பழனி 2019-ம் ஆண்டு இறந்த பிறகு குடும்ப பாரத்தைத் தானே சுமந்து, மகன் கோகுல் ஸ்ரீயைத் தொடர்ந்து படிக்கவைக்க முடியாத நிலையில் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு பொம்மைக்கடையில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 29.12.2022 அன்று நண்பர்களைப் பார்க்கச் சென்றுவிட்டு ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அப்போது பணியிலிருந்த ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணியளவில் கோகுல் ஸ்ரீயின் தாய் பிரியாவை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து அழைத்து தங்கள் மகன் பூரி சாப்பிடும்போது வலிப்பு ஏற்பட்டது. அதனால், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும், அவரை விரைவில் வரச்சொல்லியும் கூறியிருக்கின்றனர். சற்று நேரத்துக்குப் பிறகு அதே நபர், `உங்கள் மகனை எமர்ஜென்சி வார்டில் சேர்த்திருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். பின்னர் அதே நபர் பத்து நிமிடங்கள் இடைவெளியில், `உங்கள் மகன் இறந்துவிட்டான்’ என்று தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ
உயிரிழந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ

இரவு 8 மணி அளவில் செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனின் தாய் பிரியாவை, மகனின் உடலைப் பார்க்க அனுமதிக்காமல் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலரின் உத்தரவின்பேரில் கட்டாயமாகச் செங்கல்பட்டிலுள்ள ஒரு வீட்டில் அடைத்துவைத்து அவரை யாரிடமும் பேசவிடாமல் செல்போனைப் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டனர். மறுநாள் 2023, ஜனவரி 1-ம் தேதி பகல் 1 மணி அளவில் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு சென்று இறந்த நிலையிலிருந்த கோகுல் ஸ்ரீயைக் காட்டியுள்ளனர்.

சிறுவனுக்கு, கீழ் உதடு இரண்டாகக் கிழிந்து உடல் முழுவதும் கொடூரக் காயங்கள் இருந்திருக்கின்றன. `என் மகன் வலிப்பு நோயால் இறக்கவில்லை. நீங்கள் சித்திரவதை செய்து அடித்துக் கொலை செய்திருக்கிறீர்கள்’ என்று கண்ணீர்விட்டு கதறி அழுதிருக்கிறார் அந்தத் தாய். பின்னர் அங்கிருந்து அவரை மீண்டும் வலுக்கட்டாயமாக அவர் அடைத்துவைக்கப்பட்டிருந்த வீட்டுக்குக் கொண்டு சென்று, மீண்டும் அவரை வீட்டுக் காவலில் வைத்து ஜனவரி 2-ம் தேதியன்று சீர்திருத்தப் பள்ளியின் அதிகாரி ஒருவர் வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டியுள்ளனர். இந்தக் கொடுமையான சூழலில் சத்தம் போட்டு வீட்டைவிட்டு வெளியேறி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் பிரியா.

சிறுவனின் தாய்
சிறுவனின் தாய்

பிறகு, செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஜனவரி 3-ம் தேதி செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு மருத்துவர்கள் சிறுவன் கோகுல் ஸ்ரீயின் உடலை உடற்கூறாய்வு செய்திருக்கிறார்கள். பின்னர், மேல் கூறாய்வுக்கு கிண்டியிலுள்ள கிங் மருத்துவ இன்ஸ்டிட்யூட்டுக்கு சிறுவனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மருத்துவ அறிக்கைகளிலும் சிறுவன் கோகுல் ஸ்ரீ கொடூரமாக அடித்துச் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு செங்கல்பட்டு நகரக் காவல்துறை இதைக் கொலை வழக்காக மாற்றி, லாக்கப் சித்ரவதைக் கொலையில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணைக் கண்காணிப்பாளர் நித்தியானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்த தமிழகக் காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது. இந்த வழக்கைச் சட்டம்-ஒழுங்கு காவல்துறையிலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி அபலைப் பெண் பிரியாவைச் சட்டவிரோதமாக அடைத்துவைத்து வெள்ளைத்தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி
சிறுவர் சீர்திருத்தப் பள்ளி

கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருக்கும் தாய் திருமதி பிரியாவுக்குத் தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்கி வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.