Published:Updated:

துப்பாக்கிச்சூடு விவகாரம்: அஸ்ஸாம் முதல்வர்மீது வழக்கு தொடர்ந்த மிசோரம்!

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை

சமீபத்தில் நடைபெற்ற எல்லை விவகாரம் தொடர்பாக மிசோரம் காவல்துறையினர், அஸ்ஸாம் மாநில முதல்வர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) உள்ளிட்ட அந்த மாநிலத்தில் பல முக்கிய அதிகாரிகளின் மீது மிசோரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முதல்வர் சர்மா மீதும் அஸ்ஸாம் காவல்துறையின் மூத்த அதிகாரிகளின் மீதும் கொலை முயற்சி மற்றும் குற்றச் சதி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மிசோரம் இரண்டும் 162 கிலோமீட்டர் அளவுக்குத் தங்களின் எல்லையைப் பகிர்ந்துவருகின்றன. இந்த இரு மாநிலங்களுக்கும் இடையில் 1995-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது. பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இதுவரை அந்தப் பிரச்னைக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அஸ்ஸாம் மாநிலத்தின் சச்சாரின் மாவட்டத்திலுள்ள லைலாபூரில் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் மிசோரம் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மையம் அமைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பெரும் வன்முறையும் அங்கு நடந்தது.

இந்தநிலையில், கடந்த 26-ம் தேதி மிசோரம் மாநிலத்தின் கொலாசிப் மாவட்டத்திலுள்ள வெய்ரன்ட் கிராமத்தில் இரண்டு மாநில காவல்துறைக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் இரண்டு மாநில காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் அஸ்ஸாம் காவல்துறையைச் சேர்ந்த ஆறு பேர் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்தனர். நிலைமை மோசமடையாமலிருக்க இரண்டு மாநில எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு பிரச்னைக்குரிய இடங்களில் துணை ராணுவத்தினர் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை

``இந்த வன்முறை தொடர்பாக மிசோரம் காவல்துறை சார்பில் அஸ்ஸாம் முதல்வர், காவல்துறை உயரதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஜி அனுராக் அகர்வால், டி.ஐ.ஜி தேவ்ஜோதி முகர்ஜி, கச்சார் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் நிம்பல்கர், காவல் நிலையப் பொறுப்பாளர் சனாப் உதின், துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி, வனத்துறை அதிகாரி சன்னிதேவ் சௌதாரி ஆகியோர் மீதும், இவர்கள் தவிர அடையாளம் தெரியாத 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று மிசோரம் ஐஜி ஜான் நெஹ்லியா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த துப்பாக்கிச்சூடு பிரச்னைக்கு அஸ்ஸாம் சார்பில், ``கச்சார்-கொலாசிப் எல்லையிலுள்ள காடுகளின் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாளில் அந்தக் கடத்தல் நடந்திருக்கலாம். இதற்கு மிசோரம் அரசியல்ரீதியான தொடர்பும் இருக்கலாம். சமீபகாலங்களாக எல்லைப் பிரச்னையைவிட இதுபோல ஏற்படும் பிரச்னைகள் அதிகம்" என்று கூறியுள்ளது. மிசோரம் சார்பில், ``சம்பவம் நடைபெற்ற தினத்தில் 200-க்கும் அதிகமான அஸ்ஸாம் காவல்துறையினர் மிசோரம் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தனர். மிசோரம் காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சார்பில், நடைபெற்ற கலவரம் தொடர்பாக மிசோரம் கொலாசிப் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர், அரசு அதிகாரிகள் உட்பட ஆறு அதிகாரிகளை விசாரணைக்கு வர சம்மன் அனுப்பியுள்ளார். அதோடு. மிசோரம் அதிகாரிகளின் மீது கொலை, கொலை முயற்சி, குற்றவியல் சதி, கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னை தொடர்பாக இரண்டு மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார். எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அறிவுறுத்தியுள்ளார். இரண்டு மாநில முதல்வர்களும் சுமுகமாகப் பிரச்னையைச் சரிசெய்துகொள்வதாக உறுதியளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லை பிரச்னை:`கொல்லப்பட்ட அஸ்ஸாம் காவலர்கள்; கைதட்டிக் கொண்டாடும் மிசோரம்?!'-என்ன நடக்கிறது அங்கே?
அடுத்த கட்டுரைக்கு