Published:Updated:

கோவை சம்பவம்: என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப் பரிந்துரை; காவல்துறையில் சிறப்புப் படை அமைக்க முதல்வர் உத்தரவு!

முதல்வர் ஸ்டாலின்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்குப் பரிந்துரை செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோவை சம்பவம்: என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப் பரிந்துரை; காவல்துறையில் சிறப்புப் படை அமைக்க முதல்வர் உத்தரவு!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்குப் பரிந்துரை செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

கோவை உக்கடம் கோட்டைமேட்டிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு முன்பு கார் ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்குப் பரிந்துரை செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், ``கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கியப் பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்குத் தக்க பாதுகாப்பை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.