Published:Updated:

கட்டுக்கட்டாக 2000 ரூபாய் பணத்துடன் சிக்கிய திமுக எம்எல்ஏ?- சுற்றிவளைத்து பிடித்த நாங்குநேரி மக்கள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் பணத்துடன் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் முற்றுகையில் தி.மு.க-வினர்
பொதுமக்களின் முற்றுகையில் தி.மு.க-வினர்

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான இறுதிக்கட்டப் பிரசாரம் விறுவிறுப்பாக நடக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் ஆகியோர் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

நாங்குநேரி இடைத்தேர்தல்... கடும் போட்டியில் அ.தி.மு.க., காங்கிரஸ்!
ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வும் காங்கிரஸும் ஏற்கெனவே வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்துவிட்டன.
சுயேச்சை வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகப் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தார்கள். வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் ஆயிரம் ரூபாயும் மற்றொரு தரப்பினர் இரண்டாயிரம் ரூபாயும் பட்டுவாடா செய்துவிட்டதாக சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் என்னும் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருக்கும் வீட்டில் பெரியகுளம் எம்.எல்.ஏ-வான சரவணகுமார் என்பவரது தலைமையில் தி.மு.க-வைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

சிதறிக் கிடந்த பணம்
சிதறிக் கிடந்த பணம்

அவர்கள் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத அரசை கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியையும் ஏற்றியிருக்கிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள கிராமத்தில் பணம் கொடுக்க முயற்சி செய்ததால் அதிருப்தியடைந்த பொதுமக்களே பணம் கொடுக்க வந்தவர்களை சிறைப்பிடித்ததாகக் கிராமத்தினர் தெரிவித்தனர். சரவணகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்ட 5 பேரை மக்கள் சிறைப்பிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சி செய்ததாகப் புகார்
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சி செய்ததாகப் புகார்

உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ஆனால், வருவாய்த்துறையினர் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் விசாரித்தபோது, அந்த வீட்டில் 10 பேர் தங்கியிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரவர் தேவைக்காகப் பணம் வைத்திருந்ததாகத் தெரிவித்தார்கள்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வந்ததாக தி.மு.க-வினரைச் சிறைப்பிடித்த கிராமத்தினர் கூறுகையில், ‘’அந்த வீட்டுக்குள் இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்கட்டாக இருந்தது. நாங்கள் வீட்டைச் சுற்றி வளைத்ததும் அங்கிருந்து இருவர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அவர்களைப் பிடிக்க முடியவில்லை’’ என்றார்கள்.

வீட்டின் அருகே நின்ற கார்
வீட்டின் அருகே நின்ற கார்

அந்த வீட்டின் வாசலில் ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாகச் சிதறிக்கிடந்தன. அவர்களிடமிருந்து 2,78,000 ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தேர்தல் அலுவலர்களும் காவல்துறையினரும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.