நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ விசாரித்துவருகிறது. சுஷாந்த் சிங்கிடம் திஷா சலியன் என்ற பெண் மேனேஜராக இருந்தார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு திஷா தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், திஷா தற்கொலைக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கர்ப்பமாக இருந்ததாகவும் மத்திய அமைச்சர் நாராயண் ராணேவும், அவர் மகன் நிதேஷ் ராணேவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதையடுத்து, தங்கள் மகளை அரசியல்வாதிகள் களங்கப்படுத்துவதாக திஷாவின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர். அதோடு இது குறித்து மாநிலப் பெண்கள் கமிஷனிலும் திஷாவின் பெற்றோர் புகார் செய்தனர்.
தங்கள் மகள் குறித்து அவதூறான தகவல்களைப் பதிவிட்டுவருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ அல்லது கர்ப்பமாக இருந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் பெற்றோர் தங்கள் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து திஷா குறித்து அவதூறு தகவல்கள் இடம்பெற்ற சமூக வலைதள கணக்கை பிளாக் செய்யும்படியும், அந்தத் தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணே, அவர் மகன் நிதேஷ் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலி சகன்கர் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், இது குறித்து நாராயண் ராணே, அவர் மகன் நிதேஷ் ராணே மீது மால்வானி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இருவரும் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 3-ம் தேதி நிதேஷ் ராணேவும், 4-ம் தேதி நாராயண் ராணேவும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.