Published:Updated:

'மும்பை தாதா சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக வதந்தி': எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

மருத்துவமனையில் சோட்டா ராஜன்
மருத்துவமனையில் சோட்டா ராஜன்

கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டதாகச் செய்தி வெளியானது. ஆனால் இதில் எந்தவித உண்மையும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதியிலிருந்து சிகிச்சை பெற்றுவந்தார் . அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுவந்தது. சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக சில மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், சோட்டாராஜன் இறந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்ற தகவலும் வெளியானது. பின்னர் அவர் இறந்த செய்தி உறுதி செய்யப்பட்டது. சோட்டாராஜன் இறந்தாக வெளியான செய்தி உண்மையில்லை என்று, சோட்டா ராஜன் சிகிச்சைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லி போலீஸாரும் சோட்டாராஜன் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதயப் பிரச்னை, நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை போன்ற பல உடல்நலக் கோளாறுகள் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து, சோட்டா ராஜனின் மனைவி சுஜாதா, அவர் சகோதரர் தீபக் நிகல்ஜி ஆகியோரிடம் இந்தச் செய்தி உண்மைதானா என்று விசாரிக்க ஏராளமானோர் படையெடுத்தனர். இப்படி முன்பின் முரணான தகவல்கள் வரும் சோட்டா ராஜன் காவல்துறையால் தேடப்பட்டுவந்த முக்கியக் குற்றவாளி. சோட்டா ராஜன் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 70 வழக்குகள் வரை நிலுவையில் இருக்கின்றன. நீண்ட நாள்களாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் கைதுசெய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தோனேசியாவில் கைதான   சோட்டா ராஜன்
இந்தோனேசியாவில் கைதான சோட்டா ராஜன்

அவர் மீதான வழக்குகள் அனைத்தும் மும்பையில் இருந்தாலும், மும்பை சிறையில் அடைத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லி திகார் சிறையில் அடைத்திருந்தனர். மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் சோட்டா ராஜனின் பரம எதிரியான தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதியே சோட்டா ராஜனைத் தொடர்ந்து டெல்லியில் வைத்திருப்பது என்று சி.பி.ஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு மும்பை போலீசார் விசாரித்துவந்த அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ தன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்துவருகிறது. கோர்ட்டில் நேரடியாக ஆஜர்படுத்தாமல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமே சி.பி.ஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி வந்தனர். சமீபத்தில் ஒரு வழக்கில் சோட்டா ராஜன் விடுவிக்கப்பட்டார்.

சோட்டா ராஜனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டாசகீல் இருந்தார். தாய்லாந்தில் சோட்டா ராஜன் ஹோட்டலில் இருந்தபோது இரவில் சோட்டாசகீல் ஆட்கள் உள்ளே புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதில் சோட்டா ராஜன் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பியோடினார் . அதன் பிறகு தொடர்ந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒவ்வோர் இடமாக அலைந்துகொண்டிருந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் பதுங்கியிருந்த நிலையில் போலீஸிடம் சிக்கினார் . சோட்டா ராஜனும், தாவூத் இப்ராகிமும் ஆரம்பகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். சோட்டா ராஜன் இளம் வயதில் மும்பை செம்பூர் பகுதியில் சினிமா தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவந்துள்ளார் . பின்னர் படாராஜன் என்பவரின் கூட்டத்தில் சேர்ந்து சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டுவந்த சோட்டா ராஜன் ஒரு கட்டத்தில் படாராஜன் கூட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்தார் . படாராஜனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இதனால் படாராஜன் கூட்டத்தைத் தன் வசப்படுத்திக்கொண்டு தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற வேலையில் ஈடுபட்டுவந்தார் . மும்பையிலுள்ள பீர் பார் மற்றும் பில்டர்களை மிரட்டிப் பணம் பறித்துவந்தார். தாவூத் இப்ராகிம் துபாய் தப்பிய பிறகு தாவூத்தின் வேலைகளை சோட்டா ராஜன் மும்பையில் செய்துவந்தார் . ஆனால் மும்பையில் அருண்காவ்லிக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சோட்டா ராஜனும் துபாய் சென்றார். துபாய் சென்ற பிறகுதான் சோட்டா ராஜனுக்கும் சோட்டாசகீலுக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இறுதியில் சோட்டா ராஜன் தாவூத்தைவிட்டுப் பிரிந்தார் .

எந்தக் காரியத்தையும் இருவரும் சேர்ந்தே செய்துவந்தனர். மும்பையில் தாவூத் இப்ராகிம் 1993-ம் ஆண்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்திய பிறகு சோட்டா ராஜன் தாவூத் இப்ராகிமிடமிருந்து தனியாகப் பிரித்தார் . இந்திய உளவுத்துறை உதவி செய்ததால், சோட்டா ராஜன் துபாயிலிருந்து உயிரோடு தப்பித்து வந்தார் . அதன் பிறகு இந்திய உளவுத்துறைக்கு சோட்டா ராஜன் தாவூத் இப்ராகிம் தொடர்பான தகவல்களை அடிக்கடி தெரிவித்தார். சோட்டா ராஜனை எப்படியும் கொலை செய்துவிட வேண்டும் என தாவூத் இப்ராகிம் நினைத்தார் . தாவூத்திடமிருந்து பிரிந்த பிறகு தாவூத் இப்ராகிமுக்கு மிகவும் நெருக்கமானவர்களை சோட்டா ராஜன் தொடர்ந்து கொலை செய்தார். இதையடுத்து இருவரும் ஒருவர் ஆட்களை ஒருவர் கொலை செய்வதில் தீவிரம் காட்டினர். ஒருகட்டத்தில் சோட்டா ராஜன் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கடலில் கப்பலிலேயே வாழ ஆரம்பித்தார். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்துவந்தார். இறுதியில் கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு