Election bannerElection banner
Published:Updated:

திகார் சிறை: மும்பை தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா! - எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

தாவூத் இப்ராகிமுடன் சோட்டாராஜன்
தாவூத் இப்ராகிமுடன் சோட்டாராஜன்

சோட்டாராஜன் தொடர்பான வழக்கு ஒன்று டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. வழக்கமாக சோட்டாராஜனை வீடியோ கான்பெரன்ஸ் மூலமே போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவது வழக்கம்.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற ஏராளமான குற்றங்களில் ஈடுபட்ட சோட்டாராஜன் வெளிநாட்டில் பதுங்கி இருந்தான். அவன் இந்தோனேசியாவில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். அவன் மீதான வழக்குகள் அனைத்தும் மும்பையில் இருந்த போதும் பாதுகாப்பு கருதி அவனை சி.பி.ஐ.அதிகாரிகள் டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர். மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அவனுக்கு தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளால் ஆபத்து ஏற்பட்டு என்று கருதி அவன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்துதான் சோட்டாராஜன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான். ஆனால் மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகுசோட்டாராஜன் தனித்து செயல்பட ஆரம்பித்தான். அதன் பிறகு இருவருக்கும் இடையே கடுமையான பகை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் கைதான சோட்டாராஜன்
இந்தோனேசியாவில் கைதான சோட்டாராஜன்

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 61 வயதாகும் சோட்டாராஜன் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சோட்டாராஜன் தொடர்பான வழக்கு ஒன்று டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. வழக்கமாக சோட்டாராஜனை வீடியோ கான்பெரன்ஸ் மூலமே போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது சோட்டாராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவரை வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாது என்று டெல்லி திகார் சிறை அதிகாரி செசன்ஸ் கோர்ட்டிற்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட சோட்டாராஜன் மீது 70 வழக்குகள் இருக்கிறது. இவ்வழக்குகள் அனைத்தும் மும்பை போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வழக்குகள் அனைத்தும் தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு சோட்டாராஜனுக்கு பத்திரிக்கையாளர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த வாரம் சோட்டாராஜன் கொலை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே|பகுதி-3

இதற்கிடையே மும்பையில் உள்ள பெண்கள் சிறையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. பைகுலாவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திராணி முகர்ஜி உட்பட 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று மும்பை அருகில் உள்ள தலோஜா சிறையிலும் 300க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே சிறையில் கூட்டத்தை குறைக்க சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள், விசாரணை கைதிகள் சிலரை அரசு சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு