Published:Updated:

`பாதுகாப்புக்கு இருக்கும் காவலரே தகவல் கொடுத்தாரா..?’ - உன்னாவ் வழக்கில் அதிர்ச்சி

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருக்க வேண்டிய காவலர் விபத்து நடந்த அன்று உடன் இல்லாதது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது.

குல்தீப் செங்கார்
குல்தீப் செங்கார்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், 17 வயதுச் சிறுமி, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த 2017-ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எம்.எல்.ஏ-யிடம் வேலை கேட்டு சென்றபோது இந்தக் கொடூர சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார். அதற்கும் முன்னதாக அவர் எம்.எல்.ஏ ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுன் முன்பு பாதிக்கப்பட்ட மற்றும் அவரின் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்ய பிரச்னை பூதாகரமானது. குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குல்தீப் சிங் சிறையில் தான் இருக்கிறார். இந்நிலையில்தான் கடந்த ஞாயிறு அன்று, பாதிக்கபட்ட பெண் பயணித்த கார், அதிவேகமாக வந்த லாரியால் மோதலுக்குள்ளானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பயணித்த அவரின் இரு பெண் உறவினர் பலியாயினர். மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் கடுமையான காயங்களுடன் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமளியிலும் ஈடுபட்டனர்.

கைது
கைது

இந்த விபத்தும் எம்.எல்.ஏ குல்தீப் செங்காரின் வேலைதான் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா அளித்த புகாரில், ``பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரியே அவர்களின் பயன விவரங்களை எம்.எல்.ஏ மற்றும் அவரது சகாக்களுக்கு அளித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருக்க வேண்டிய காவலர் அன்று இல்லாதது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

ஆனால், அன்று பணியில் இருந்த காவலர் சுரேஷ் என்.டி.டி.வி ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், ``குறிப்பிட்ட நாளில் நான் அப்பெண்ணின் உறவினர் காரில் இடமில்லை. இன்று நீங்கள் வர வேண்டாம். அதான், நாங்கள் இருக்கிறோமே. பார்த்துக்கொள்கிறோம். மாலைக்குள் வந்துவிடுகிறோம்” என்றார். அதனால்தான் நான் செல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Vikatan

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் இந்தச் சம்பவம் தொடர்பாக பேசுகையில், ``எம்.எல்.ஏ-தான் இதையும் செய்திருக்க வேண்டும். சிறையில் இருந்துகொண்டே அனைத்தையும் செய்கிறார் அவர். வழக்கை திரும்பபெற வேண்டுமென தொடர்ந்து அவரின் ஆட்களால் நாங்கள் மிரட்டப்படுகிறோம்” என்றார்.