Published:Updated:

`அவளின் பிரச்னையைச் சொல்ல மறுக்கிறாங்க; எங்களுக்கு உதவுங்கள்!’ - உன்னாவ் சிறுமியின் சகோதரி கண்ணீர்

சத்யா கோபாலன்

உன்னாவ் சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு, தன் பகுதியில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரிடம் வேலை கேட்டுச் சென்றபோது, அவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ
பா.ஜ.க எம்.எல்.ஏ

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றபோதுதான், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பின்னர், குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி பயணித்த காரின்மீது லாரி மோதியது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது அவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து, இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் உன்னாவ் வழக்கு அதிக கவனம் பெற்றது. சிறுமி, காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, தாங்கள் சந்திக்கும் சிரமங்களைத் தெரிவித்துள்ள சிறுமியின் உறவினர்கள்,” எங்கள் பெண் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பிறகு, எங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உத்தரப்பிரதேசத்தின் பல அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதிவிட்டோம். ஆனால், ஒரு கடிதத்துக்குக்கூட இதுவரை பதில் வரவில்லை. ஏப்ரல் 2018 முதல் இதுவரை 36 கடிதங்கள் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

உன்னாவ் விபத்து
உன்னாவ் விபத்து
ANI

“எங்களுக்கு உதவி செய்ய அனைவரும் அஞ்சுகிறார்கள். சிறையில் உள்ள எம்.எல்.ஏ-வின் அடியாட்கள், எங்களைக் கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள். அதுதொடர்பாகப் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்” என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா கூறியுள்ளார்.

இந்நிலையில், “ என் சகோதரியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவளுக்கு என்ன பிரச்னை என மருத்துவர்கள் எங்களிடம் கூற மறுக்கின்றனர். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். எங்கள் மாமாமீது பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது எதுவும் உண்மை இல்லை. அவரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை” என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி, 'டைம்ஸ் நவ்' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பிற்பகல் 12 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ சிபிஐ அதிகாரிகளை நேரில் ஆஜராகும்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால், அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

அவரின் வேண்டுகோளை மறுத்த நீதிபதி, ‘ சிபிஐ அதிகாரிகளிடம் நிச்சயமாகத் தனி விமானம் இருக்கும். அதில் அவர்களை அழைத்துவாருங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் தனி விமானத்தில் அழைத்துவாருங்கள்’ எனக் கூறினார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. உன்னாவ் சிறுமியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த மூன்று காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.