Published:Updated:

`இனி கிராமசபையில் கேள்வி கேட்பாயா?' -திருச்சி நாம் தமிழர் நிர்வாகியைப் பதறவைத்த மர்ம நபர்கள்

தாக்குதலுக்கு ஆளான கண்ணன்
தாக்குதலுக்கு ஆளான கண்ணன்

கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை, மர்மநபர்கள் தாக்கிய சம்பவம்,  திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் கண்ணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் திருப்பைஞ்சீலி பகுதியில் நின்றுகொண்டிருந்த கண்ணனிடம், அங்கு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வழி கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு திரும்பிய கண்ணனின் தலையில், பைக்கில் வந்தவர்களில் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான கண்ணன்
தாக்குதலுக்கு உள்ளான கண்ணன்

இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காதவர், சுதாரிப்பதற்குள் கைகளில் அடுத்த வெட்டு விழுந்துள்ளது. ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர்களிடமிருந்து தப்பியோடிய கண்ணன், அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மர்ம நபர்களின் தாக்குதல் குறித்து தகவலறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் பிரபு தலைமையிலான கட்சியினர் திரண்டுவந்து படுகாயமடைந்த கண்ணனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த 26-ம்தேதி திருப்பைஞ்சீலி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரட்டப்பட்ட ஆவணங்களைக் கொண்டு கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதுதான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு ஆளான கண்ணனிடம் பேசினோம். ``மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்தவகையில், கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிராமத்துக்குத் தேவையான திட்டங்களைப் பட்டியலிட்டு மனு அளித்தோம்.

தாக்குதலுக்கு உள்ளான கண்ணன்
தாக்குதலுக்கு உள்ளான கண்ணன்

மேலும், எங்கள் கிராமத்தில் 2018-19-ம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் செய்யப்பட்ட வரவு செலவு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் திரட்டி வைத்திருந்தோம்.

மண்ணச்சநல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில், 2018-19ம் நிதியாண்டில் 1,77,99, 936 ரூபாய், எங்களது திருப்பைஞ்சீலி கிராம ஊராட்சிக்கு நிதி வந்தது என்றும், அந்தத் தொகையைக் கால்நடைத் தொட்டி அமைத்தல், மரக்கன்று நடுதல், பொது இடங்களில் உறிஞ்சி குழாய் அமைத்தல், அங்கன்வாடி கழிப்பறை அமைத்தல், சிமென்ட் கான்கிரீட் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ரூ.1,02,33,819 கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆவண நகல்களைக் கிராம சபையில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வுக்காகக் கொடுத்தோம். அப்போதே எங்களுக்கு மிரட்டல் வந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்கள் பிரச்னைகளை கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினோம். அதிலிருந்து தொடர்ச்சியாக மிரட்டல் இருந்தது.

இந்நிலையில்தான், சாலையில் நின்றுகொண்டிருந்த என்னிடம் மர்ம நபர்கள் இருவர், வழி கேட்பதுபோல் வந்து தாக்கினார்கள். அதில் ஒருவன், `இனியும் கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்பியா?' எனக் கேட்டுக்கொண்டே வெட்டினான். இருட்டில் சரியாக முகம் தெரியவில்லை. லுங்கி கட்டி இருந்தார்கள். ஊருக்கு நல்லது செய்ய நினைத்ததுக்கு இதுதான் பரிசா?” என்றார் வேதனையுடன்.

அடுத்தடுத்த கொலைகள்… பட்டப்பகலில் பயங்கரம்! அதிர்ச்சியில் திருச்சி மக்கள்

இந்தத் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே, நடந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள் போலீஸார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், தாக்குதலைக் கண்டித்துப் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

பின் செல்ல