Published:Updated:

`கணக்கில் வராத ரூ.150 கோடி!' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு

இந்தக் குழுமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பள்ளி
நாமக்கல் பள்ளி

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கிரீன் பார்க் கல்விக்குழுமத்தில் நீட் பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருமான வரித்துறையின் சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ரூ.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.150 கோடி வரை கணக்கில் வராத சொத்துகள் வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையை வெளியிட்டனர்.

`கணக்கில் வராத ரூ.150 கோடி!' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு

மேலும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கல்விக்குழுமத்தைத் தவிர அதற்குச் சொந்தமான நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை உள்ளிட்ட 17 கிளைகளில் சோதனை நடைபெற்றது. உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணம் பெற்ற விவரம் தொடர்பாக சரவணன் வைத்திருந்த டைரி உட்பட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. கிரீன் பார்க் பள்ளியில் நீட் பயிற்சிக்கு குறைந்தபட்சமாக 3 லட்சமும் மாணவர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து 10 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கபட்டதாகக் கூறப்படுகிறது.

நீட் பயிற்சியளிக்க வெளிமாநிலங்களில் இருந்து அதிக ஊதியத்தில் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சரவணனின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கையும் ஆராய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

சோதனையின் போது கிரீன்பார்க் பள்ளி
சோதனையின் போது கிரீன்பார்க் பள்ளி

நீட் பயிற்சி மைய தாளாளர், இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரிடம் கடந்த 72 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை, சோதனை நிறைவு பெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணமாகப் பெற்ற தொகை விவரங்கள், வங்கிக் கணக்கு, சொத்து ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. பள்ளியில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது. பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.