Published:Updated:

`மோடி குற்றமற்றவர்!' - குஜராத் வன்முறையை விசாரித்த நானாவதி மெஹ்தா கமிஷன் அறிக்கை

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு, அதற்கு பின்பு முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை ஆகியவற்றைப் பற்றி விசாரணை செய்த நானாவதி - மெஹ்தா கமிஷன் அறிக்கை குஜராத் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு, அதற்கு பின்பு முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை ஆகியவற்றைப் பற்றி விசாரணை செய்த நானாவதி - மெஹ்தா கமிஷன், தன் அறிக்கையை குஜராத் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நானாவதி - மெஹ்தா கமிஷன் அறிக்கை, `மோடி மீது குற்றம் இல்லை; ஒரு முதல்வராக தன் கடமையைச் செய்தார்' எனவும் கூறியுள்ளது. நானாவதி - மெஹ்தா கமிஷன் 2002-ம் ஆண்டு, அன்றைய குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு
கோத்ரா ரயில் எரிப்பு

நானாவதி - மெஹ்தா கமிஷன் விசாரணையில் மோடி குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதால், அவர் மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக பிஜேபியினர் கூறியுள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோத்தியிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் அயோத்தி சென்று திரும்பிய 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் மீது வன்முறை வெடித்தது.

மாநிலம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறையில் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சிறுபான்மையினரின் ஏறத்தாழ 500 வழிபாட்டுத் தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநிலத்திற்குள் இன்றும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர் மீதான இந்த வன்முறைக்குக் காரணம், அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குஜராத் வன்முறை
குஜராத் வன்முறை

இதை விசாரிக்க மோடி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். மோடியும், ஷாவும் நண்பர்கள் என்ற விமர்சனம் வெகுவாக எழுந்தது. அதனால், ஓய்வுபெற்ற நீதிபதி நானாவதி இந்த ஆணையத்தின் மற்றோர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் ஏற்கெனவே 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர் மீதான வன்முறையை விசாரித்தவர். 2008-ம் ஆண்டு, நீதிபதி ஷா மரணமடைந்ததால், அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி அக்‌ஷய் மெஹ்தா நியமிக்கப்பட்டார். அதனால் இந்த ஆணையம், நானாவதி - மெஹ்தா கமிஷன் என்று அழைக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தது நானாவதி மெஹ்தா கமிஷன். 168 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை முழுவதும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைப் பற்றி கூறியது. கோத்ரா ரயில் எரிப்பு, அந்தப் பகுதியில் வாழ்ந்த சில முஸ்லிம்களால் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க நடத்தப்பட்டது எனக் கூறியது அந்த அறிக்கை. மேலும், அந்த அறிக்கையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் கோத்ரா சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லையெனக் கூறப்பட்டது.

மோடி, விஜய், கோலி, பிகில் - ட்விட்டர் இந்தியாவின் டாப் 10! #ThisHappened2019
நானாவதி மெஹ்தா கமிஷனின் இறுதி அறிக்கை, 2014-ம் ஆண்டு குஜராத் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கடந்த டிசம்பர் 11 அன்று குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத் படுகொலைகளில் அன்றைய முதல்வர் மோடி மீது காவல்துறை உயரதிகாரிகள் மூன்று பேர் புகார் தெரிவித்திருந்தனர். சஞ்சீவ் பட், ஆர்.பி.ஸ்ரீகுமார், ராகுல் ஷர்மா ஆகிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான இந்த மூன்று பேரும் மோடியின் அன்றைய குஜராத் அரசின் கீழ் பணியாற்றிய உயரதிகாரிகள்.

சஞ்சீவ் பட்
சஞ்சீவ் பட்

சஞ்சீவ் பட் 2002-ம் ஆண்டு, குஜராத் மாநில அரசின் உளவுத்துறையின் துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார். மோடியின் பாதுகாப்பு இவரது பொறுப்பின்கீழ் இருந்தது. 2002-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, முஸ்லிம்கள் குறித்து இழிவாகப் பேசியதாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் குற்றம் சாட்டியது. மோடியின் பேச்சு குறித்து எந்தவொரு சாட்சியும் இல்லையென கூறப்பட்ட நிலையில், சஞ்சீவ் பட் தலைமையிலான உளவுத்துறை, மோடியின் அந்தப் பேச்சின் பதிவுகளை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதனால் சஞ்சீவ் பட் பலமுறை இடம் மாறுதலுக்கு உள்ளானார்.

2011-ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் குஜராத் வன்முறையில் மோடிக்கு பங்கு இருப்பதாக சஞ்சீவ் பட் மனுத்தாக்கல் செய்தார். அதன்பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கஸ்டடியில் நிகழ்ந்த மரணம் ஒன்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு, தற்போது வரை சிறையில் உள்ளார். அவர் மோடிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததே, அவர் சிறையில் இருப்பதற்கான காரணம் என சஞ்சீவ் பட்டின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

ஆர்.பி.ஸ்ரீகுமார்
ஆர்.பி.ஸ்ரீகுமார்

ஆர்.பி.ஸ்ரீகுமார் குஜராத் வன்முறை நிகழ்ந்த போது, உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி பொறுப்பில் இருந்தவர். இவருக்கு மேற்பொறுப்பில் இருந்த டி.ஜி.பி, மோடி காவல்துறை உயரதிகாரிகளோடு நடந்த சந்திப்பில், 'கோத்ரா சம்பவத்திற்காக இந்துக்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொள்ளட்டும்; காவல்துறை தலையிட வேண்டாம்' என்று கூறியதை வெளிப்படுத்தினார். நானாவதி மெஹ்தா கமிஷனுக்கு இதை வாக்குமூலமாகச் சமர்ப்பித்தார். மேலும் அன்றைய தலைமை தேர்தல் அதிகாரி ஜேம்ஸ் மைக்கேல் லிங்க்டோவுக்கு குஜராத் அரசியல்வாதிகள், காவல்துறை ஆகியோர் இணைந்து வன்முறை நடத்தியதாக ஆதாரங்கள் அளித்தார். இதனால் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராகுல் ஷர்மா குஜராத் வன்முறையின் போது பாவ்நகர் பகுதி எஸ்.பியாகச் செயல்பட்டவர். தனது பகுதியில் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர். களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராகுல் ஷர்மா இதனால் அகமதாபாத் கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபடியே, குஜராத் பி.ஜே.பி தலைவர்களின் செல்போன்களை - குஜராத் வன்முறை வழக்குகளின் தொடர்ச்சியாக ஒட்டுக்கேட்டு, ஆதாரங்களைச் சேகரித்தார். எனினும், இந்த ஆதாரங்களை சி.டி ஒன்றில் அவர் சமர்ப்பித்த போது, அவை 'வேலை செய்யவில்லை'.

ஆஷிஷ் கேத்தன்
ஆஷிஷ் கேத்தன்

தற்போது நானாவதி மெஹ்தா கமிஷன் அறிக்கை, இந்த மூன்று உயரதிகாரிகளும் தங்கள் உயரதிகாரிகள் மீதும், குஜராத் அரசு மீதும் கொண்ட காழ்ப்புணர்வால் பொய் சொல்வதாகவும், ராகுல் ஷர்மா அளித்த ஆதாரங்களில் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது. குஜராத் மக்கள் மனதில் மதவெறி குடிகொண்டுள்ளதே வன்முறைக்குக் காரணம் எனவும், காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுப் போதிய காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறது நானாவது மெஹ்தா கமிஷன் அறிக்கை.

எனினும், இந்த அறிக்கை பல கேள்விகளுக்கு பதில் தரவில்லை. தீஸ்தா செதல்வாட் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், உண்மையறியும் குழுக்கள் அளித்த அறிக்கைகள் குஜராத் அரசுக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன. மேலும், தெஹல்கா பத்திரிகையின் நிருபர் ஆஷிஷ் கேத்தன் குஜராத் வன்முறையில் ஆளும் பி.ஜே.பி, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக அதன் தலைவர்களின் வாக்குமூலங்களை ரகசிய வீடியோக்களாக வெளியிட்டார். ஆறு மாதங்கள் அவர் நடத்திய விசாரணையில் குஜராத் அரசும், காவல்துறையும் எப்படி சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நடத்தியது என்பதை அவர் அம்பலப்படுத்தினார்.

`டியர் மோடி, எதிர்காலத்தைக் காப்பாற்ற சட்டம் இயற்றுங்கள்!'- 
 8 வயது சிறுமியின் கோரிக்கை

இந்திய நீதித்துறையின் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கூற்றில் உண்மை மட்டுமே பொதிந்திருக்கும் என்பது ஒவ்வோர் இந்தியரின் நம்பிக்கை. நீதித்துறையின் நீட்சியாக இயங்கிய ஒரு கமிஷன் கொடுத்திருக்கும் தீர்ப்பு இதுதான் - 'மோடிக்கும் குஜராத் வன்முறைக்கும் தொடர்பு இல்லை'.